இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்குமுறை வடிவிலான தலையீடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துவதுடன், இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிடவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த வாரம் மதவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 8 தமிழ் இந்துக்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 10 நாட்களுக்கும் மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் திங்கட்கிழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
மத மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திர உரிமையை மீறும் வகையில் அண்மைய சில வருடங்களாக இலங்கை அரசாங்கமும், தேசியவாத சிங்கள பௌத்த பிக்குகளும் நாட்டில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்து வருகின்றனர்.
அதற்கமைய கடந்த வாரம் எண்மர் கைதுசெய்யப்பட்ட இடமான வவுனியா, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை அரசாங்க தொல்பொருள் திணைக்களத்தினால் அனுசரணையளிக்கப்படும் பௌத்த பிக்குகள் ‘புராதன பௌத்த இடம்’ என்று கூறுகின்றனர்.
அரசாங்கக் கட்டமைப்புக்கள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரின் ஒத்துழைப்புடன் தேசியவாத பௌத்த பிக்குகளால் வட, கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி உரிமை கோரப்படும் பல ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்கமுடியும் என வவுனியா நீதிவான் நீதிமன்றம் ஆரம்பத்தில் தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி அங்கு பிரசன்னமான பொலிஸார் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதுமாத்திரமன்றி கைதுசெய்யப்பட்டவர்கள், தாம் பொலிஸ் காவலின் கீழ் தாக்கப்பட்டதாகக் கூறியதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
அதேபோன்று முதல் மூன்று தினங்களுக்கு கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (19) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலையை இந்துக்கள் தமது புராதன தலமாகக் கருதுகின்றனர். அதன்படி அங்கு வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களம் கூறியிருக்கும் அதேவேளை, வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகக் கொழுத்தப்பட்ட தீயினால் தேசம் ஏற்பட்டமையினாலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வெடுக்குநாறிமலையில் அதனையொத்த இந்து வழிபாட்டு செயன்முறைகள் பல வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்குமுறை வடிவிலான தலையீடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தும் அதேவேளை, இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிடவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.