அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும்!!

You are currently viewing அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும்!!
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும்
ஒரு எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு
ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையம் நடத்திய “எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவிஸ் தூதரகத்தின் முதன்மை அதிகாரி திருமதி ஜஸ்டின் பொய்லட், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு. சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகப்பிரதிநிதிகள் உட்பட 200ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் மற்றும் உள்நாட்டு குற்றவழக்குகள் தொடர்பான ஆவணங்களை திறந்த அணுகலில் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதனை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன் , தமிழர் அரசியல் மற்றும் சமூக வரலாற்றின் முக்கிய ஆவணங்கள் உரிய காப்பு முறைகளுடன் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தினையும், இவ் ஆவணங்கள் நல்லாட்சி, சட்டநீதி மற்றும் சமரசத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த எவ்வாறு உதவுமெனவும் , இவை எதிர்கால அரசியல் ஆராய்ச்சி, கொள்கை வடிவமைப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும் எனவும் நூலக நிறுவன தலைமை அலுவலர் அவர்கள் கலந்துரையாடினார்.
நிகழ்வில்:
01. திரு. குமாரவடிவேல் குருபரன் அவர்கள் சட்டம் மற்றும் தமிழ் அரசியல் தொடர்பான ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதன் அவசியத்தை விளக்கினார்.
02. பின்னர் நூலக நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் திருமதி றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்கள் எண்ணிம ஆவணக் காப்பக வலைத்தளத்தின் பயன்பாடு மற்றும் அணுகுமுறை குறித்து விளக்கக்காட்சி வழங்கினார்.
03. திருமதி ஜஸ்டின் பொய்லட் அவர்கள் வாழ்த்துரையினை வழங்கி, நூலக நிறுவனத்துடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
04. தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி திரு. கே. எஸ். இரத்தினவேல் அவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் சுயாதீன வழக்குத் தொடுநர் முறைமை குறித்த உரையாற்றினார்.
இறுதியில், தற்போதைய சூழலில் தமிழர் அரசியலமைப்பாக்க அணுகுமுறை குறித்த கலந்துரையாடல் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இதனை கலாநிதி குருபரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply