நோர்வே அரசியலாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக, நோர்வே காவல்துறையின் பாதுகாப்புப்பிரிவு ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“கொரோனா” முடக்கநிலை காரணமாக, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் வேளையில், அதிகளவில் இணையவலை தொடர்பாடல் பாவனையில் இருந்துவருவதால், இணையவலை தொடர்பை பாவித்து தீவிர வலதுசாரிகளும், மதவாத அடிப்படை வாதிகளும் தங்களது சித்தாந்தங்களை இளையோரிடம் விதைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கும் காவல்துறையின் பாதுகாப்பு ஆய்வுத்துறை, சமீபகாலத்தில் நோர்வேயில் பகிரங்க பேசுபொருளாகவிருக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான வாதங்கள் சிக்கல்களை உருவாக்கியுள்ள நிலையிலும் இவ்வாறான, அரசியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாமெனவும் எதிர்வு கூறியுள்ளது.
நோர்வேயின் நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் பணிகளுக்காக அரசியலாளர்கள் அதிகளவில் பொதுவெளிகளில் நடமாட வேண்டிய தேவை இருப்பதை சுட்டிக்காட்டும் பாதுகாப்புத்துறை ஆய்வகம், இவ்வாறான தாக்குதல்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென நடத்தப்படுவதால், அரசியலாளர்களின் மெய்ப்பாதுகாவலர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமெனவும் தெரிவிக்கிறது.