சிறைச்சாலை வைத்தியசாலை சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்..
சிறைச்சாலை வைத்தியசாலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
சிறைச்சாலையிலிருந்து ஒரு கடிதம் சிறைச்சாலை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு பதில் கிடைப்பதற்கு ஒன்றரை மாதம் இரண்டு மாதங்கள் செல்கின்றது.
உரிய சிறைத்தண்டனை காலத்தை பூர்த்தி செய்து அதன் பின்னர் பல வருடங்கள் சிறையில் தொடர்ந்தும் காலத்தை கழிக்கும் பலர் இருக்கின்றார்கள்.
ஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாமையே இவ்வாறான நிலைமைகளுக்கான காரணமாகும்.
மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீதித்துறை பாரியளவில் ஊழல் மிகுந்தவையாக காணப்பட்டது.
ஓர் வழக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்போதைய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் தண்டப்பணம் எவ்வளவு எவ்வாறான தீர்ப்பு என்பதனை கூறும் நிலைமையே காணப்பட்டது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.