தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றடைந்துள்ளார். துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில், அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன. இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இதனால் இந்திய அரங்கில் நாளை முதல் மாநில அரசுகளும் அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் ‘தமிழ்நாடு அரங்கு’ உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை முதல், மார்ச் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றடைந்துள்ளார். துபாய் சென்ற அவரை துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களும் வரவேற்றனர்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக சென்னை விமான நிலையத்தில், அவரை அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர். முதலமைச்சர் தலைமையிலான இக் குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
துபாயை தொடர்ந்து அபுதாபிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.