கார்மேகம் கருவறை திறந்து
வழிவிடும்
கரிகாலன் மலர்ந்த
கார்த்திகைத் திங்கள்!
உரிமைகளை விழுங்கிய
ஊழிகளின் வருகையால்
ஊர்கூடி ஒப்பாரி வைத்து
அழுது தொழுதும்
தேர் செலுத்துபவனின் சக்கரத்தில்
நசுங்கிய பசுவாய்
வலிசுமந்து நலிந்து வாழ்ந்த
இனத்தில்
தார்மீகக்கடமைதனை
தன் தோளில் சுமந்து
தனிமனிதனாய் மண்மானம்
காத்து
தரணியிலே தமிழரின்
தலைவனாய்
தலைநிமிர்ந்த தலைமகனை
சுமந்த
கார்த்திகைத் திங்கள்!
கனிகின்ற விடுதலைக்காய் இறுதிப்போர்வரை
இலக்கு தவறாது துணிவோடு
நின்று
தனித்தமிழீழமே தமிழரின்
நிரந்தரத் தீர்வென
பகைவனுக்கு பணியாது
அறம்நின்று அகம்வென்ற
ஒரு பொற்காலத்தை ஈன்ற
பெருந்தலைவரை பெற்றெடுத்த
பார்வதி அம்மாவுக்கு
பிரசவலியை கொடுத்த
கார்த்திகைத் திங்கள்!
ஒழுக்கமுள்ள தமிழ்
இராணுவப்படையை
ஈற்றினில் உருவாக்கி
ஒப்பற்ற தலைவனாய் உலகின்
உள்ளத்தில் உள்நுழைந்த
ஒரு பெருநெருப்பொன்றை
தமிழரின் கவசமாய்
கொழுத்திப்போட்ட
கார்த்திகைத் திங்கள்!
அழுதவாழ்வு அவனியில் நீங்கி
தொழுதவாழ்வின் துயரம் கழுவி
எழுகதமிழாகி எழுகதிராய் எழுந்தாய்!
நெகிழிபோல் வளைந்து நெளிந்து போகாது
நேரிய வழிகாட்டலில் தமிழீழ அரசை
தரணியில் நிறுவிய தன்நிகரில்லா
ஆதவனின் ஒளியை எமக்களித்த
கார்த்திகைத் திங்கள்!
✍தூயவன்