அறத்தாய்!
அமைதிப்புறாவாய்
அகலப்பறந்து
இதயபூமியில்
இறங்கிய
கோரப்பறவைகளின்
கொடிய சொண்டுகளில்
குயில்களும் குஞ்சுகளும்
கொத்துண்டு
உடல்கள் கிழிந்து
உயிர் பிரிந்து
பெரும் துயரம்
கருமேகமாய்
கருக்கட்டிய
நெருப்பின் மடியில்தான்
உயிர் இருப்பின் நீதிக்காய்
இரு கோரிக்கைகளை நிறுத்தி
அறப்போரில் அணையா விளக்காய்
தியாக விளக்கு எரிந்தது!
அன்னையர் முன்னணியின்
கோரிக்கைகளை
கேலியாக நினைத்து
எள்ளிநகையாடிய
நேருவின் பேரன்கள்
விண்ணை முட்டிய
மாதரின் அறப்போரினைக் கண்டு
அதிர்ந்து போயினர்!
அதனால்
பேச்சு வார்த்தைக்கு
தமிழரின் தலைநகருக்கு
அழைத்தனர்!
ஆனாலும்
கோரிக்கைகள்
குதிரைக் கொம்பாகின
மீண்டும்
அன்னையர் முன்னணி
சிங்கள தலை நகரிலே
அந்நிய படைகளோடு
பேச்சு வார்த்தை!
எல்லாமே நூலறுந்த
பட்டமாய் அறுந்து போக
பட்டினிப்போருக்கு
எல்லோரும் குதிக்க
முனைந்தனர்!
அதனால்
குலுக்கல் முறையில்
தெரிவானார்
அன்னம்மா டேவிட்!
அன்னமொறுத்து
மண்ணைக் காக்க
மாமாங்கேஸ்வர் கோயிலில்
எரிந்த தீப்பொறியை
ஆக்கிரமிப்பாளர்
கடத்தியே
அணைத்தனர்!
அதனால்
அன்னை பூபதியென்ற
பெரும் தியாகம்
அணையா விளக்காய்
ஒளிர்ந்தது!
ஒற்றை விளக்காய்
உலகத்தில்
மிளிர்ந்தது!
சொந்த பிள்ளைகளை கடத்தி
இருந்த இடத்தில் மிரட்டி
அறத்தாயின் தியாகத்தினை
சிதைக்க துணிந்தது
காந்தியின் அடியொற்றிகள்
கூட்டம்!
போரை நிறுத்து!
புலிகளோடு பேசு!
இரட்டைக் கோரிக்கைகளை
இந்திய அரசிடம் கேட்டு
காந்தீய வழியில்
கார்மேகமாய்
கரைந்தது
அன்னை பூபதியெனும்
அறத்தாய்!
விடுதலைக்காய்
விட்டுக்கொடுக்காத
அரசியலுக்காய்
விறைப்பாய்
நின்றதால்
ஒற்றைத் திங்கள் வரை
ஓர்மமாய் ஒளிர்ந்தாள்
ஒற்றை
விளக்காய்!
✍️ தூயவன்