பாட்டி சொல்லை தட்டாதே, பட்டனத்தில் பூதம் உள்ளிட்ட படங்களில் பறக்கும் காரை பார்த்து வியந்த நாம், இன்று அதில் பறக்கும் காலத்திற்கு நிஜத்திலேயே வந்து விட்டோம். உண்மைதான். விரைவில் இந்தியாவில் பறக்கும் கார் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாபெரும் கண்டுபிடிப்பை ஆசியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தைச் சார்ந்த யோகேஷ் ராமநாதன் என்பவரின் முயற்சியில் வினடா ஏரோமொபிலிட்டி என்ற நிறுவனத்தின் இளைஞர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்
இதுகுறித்து வினடா ஏரோமொபிலிட்டி நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “ஒவ்வொரு மனிதனின் கனவாக இந்த பறக்கும் காரை பார்க்கிறோம். அதை அடிப்படையாக வைத்துத்தான் இப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளோம். 2018ஆம் ஆண்டு இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டபோது உலகளவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் இந்த கண்டுபிடிப்பு முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், இன்று உலகளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நம்மிடம் அதற்கான முழுமையான திட்டம் தயார் நிலையில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அந்த வகையில், எதிர்காலத்தில் இந்தியா ட்ரோன் ஹப்பாக விளங்கும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். எனவே, அந்த வகையில் இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த கண்டுபிடிப்பு 2023ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல், இதற்கென பைலட் கிடையாது. முழுமையாக இயந்திர பயன்பாட்டு அடிப்படையில் பயணிகள் பயணிக்க முடியும்.
பறக்கும் காரில் பயணித்தால் நீங்கள் செல்லவேண்டிய இடத்தை மட்டும் தேர்வு செய்தால் போதும். ஓட்டுநர் இல்லாமல் கார் வானில் பறந்து நீங்கள் செல்லும் இடம் வந்தவுடன் தரை இறங்கும். சுமார் 10,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட பறக்கும் கார்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதில் மிக முக்கிய அம்சம் பாதுகாப்பு. அந்த வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இரட்டை எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆபத்தான நேரங்களில் எளிமையான முறையில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென்று விமான நிலையம் எல்லாம் தேவை கிடையாது. வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இடமே போதும். அவைகளை நாம் ஹெலிபேடுகளாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கான அங்கீகாரத்தை அரசு பாதுகாப்பு வழிமுறைகளுடன் வழங்கும். பெட்ரோல், டீசலை தவிர்ப்பதற்கு பயோகேஸ் முறையில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று யோகேஷ் கூறினார்.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்து அல்லது ரயிலை பயன்படுத்தி செல்லலாம். அதற்கு சுமார் இரண்டரை மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை பயணிக்கக் கூடிய நேரத்தை பறக்கும் காரின் மூலம் அரை மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்றார். 120 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து நேர்கோட்டில் கார் தரையிறங்கும். இவர்களின் முழுமையான ஆய்வு மையமானது புனேவில் அமைந்திருக்கிறது என்றும், விரைவில் தமிழகத்தில் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தயாரிப்புப் பணிகள் நடைபெறும் என்றும் யோகேஷ் கூறினார்.