ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பலம்வாய்ந்த இறுதிக் கோட்டையாகக் கருதப்பட்ட நாட்டின் நான்காவது பெரிய மஜார்-இ-ஷரீப் நகரமும் தலிபான்கள் வசம் வீழ்ந்தது.
இந்நிலையில் தலைநகர் காபூலுக்கு அடுத்த நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தலிபான்களின் வசமாகிவிட்டன.
இதனையடுத்து, தலைநகர் காபூலையும் கைப்பற்றி, அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
தற்போது காபூலில் இருந்து கிட்டத்தட்ட 80 கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தில் தலிபான்கள் நிலைகொண்டுள்ளனர்.
இதேவேளை, பெரும்பாலும் அரச படைகளில் பாரிய எதிர்ப்புக்கள் இன்றியே தலிபான்கள் நான்காவது பெரிய மஜார்-இ-ஷரீப் நகரத்தை நேற்று கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னர் கடும் எதிர்ப்புக் காட்சி ஆப்கானிஸ்தான் படைகள் ஒரு கட்டத்துக்கு மேல் அங்கிருந்து பின்வாங்கிவிட்டதால் தலிபான்கள் இலகுவாக நகரைக் கைப்பற்றிக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் ஆனேகமான முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன.
தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய அமெதரிக்கா, தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில் ஆப்கானிஸ்தானைக் கைவிட்டு முழுமையாக வெளியேறியுள்ளமை குறித்து சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
“அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும்போது தலிபான்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்பது ஏற்கெனவே கணிக்கப்பட்டது தான். இது ஆப்கான் உள்நாட்டுப் பிரச்சினை. இனி அவர்கள்தான் அவர்களின் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இருப்பினும், நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து ஆப்கான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்போம்” என இந்த விமர்சனங்களில் இருந்து நழுவும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்ஃபி கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனால் அல்-கொய்தா தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும் ஒசாமா பின் லேடனை ஒழிக்கவும் அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானின் உதவி தேவைப்பட்டது. இப்போது தங்கள் தேவை முடிந்ததும் அப்கானிஸ்தானை முழுமையாகக் கைவிட்டு அமெரிக்கா வெளியேறிவிட்டது என விமர்சகர்கள் சாடுகின்றனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை (இரட்டை கோபுரம்) அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் திகதி விமானங்களைக் கடத்தி மோதி தகர்த்தனர். அதன் பிறகு அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
அங்கு தனது படைகளை நிறுத்தி அல்-கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்கா ஒடுக்கியது.
இந்நிலையில் இப்போது திடீரென அமெரிக்கா வெளியேறிவிட்ட கையுடன் தலிபான்கள் மீண்டும் எழுச்சி பெற்று நாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்துக்குட்பட்ட காலப்பகுதிக்குள் தலிபான்கள் முழுமையாக நாட்டை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களும் உறுதி செய்துள்ளன.
ஆப்கான் தலிபான்கள் வசமாகும் நிலை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ராஜதந்திரிகள், தூதரகப் பணியாளர்கள் மற்றும் தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் துரிதமாக வெளியேற்றி வருகின்றன.
ஜேர்மனி, டென்மார்க் மற்றும் நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் காபூலில் உள்ள தங்கள் தூதரகங்களை முழுமையாக மூடி அங்கிருந்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.