சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்பின், ஆயுதபலத்தை இழந்திருந்த ரஷ்யா, இப்போது போர் ஒன்றை நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோவியத் ஒன்றியத்தின் காலத்தினல் சோவியத்தின் ஒரு பகுதியாகவிருந்து, இப்போது தனிநாடாகவுள்ள “உக்ரைன்” மீது ரஷ்யா தனது இராணுவப்பலத்தை பாவிக்குமென்ற அச்சம் உலகளாவிய அளவில் தற்போது நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் தற்போதைய இராணுவ மற்றும் ஆயுதபலம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது ரஷ்யாவிடம் உள்ள ஆயதபலமானது, 1992 ஆம் ஆண்டில் அது கொண்டிருந்த ஆயுதபலத்தைவிட மிக அதிகமானது எனவும், 2008 ஆம் ஆண்டில், “ஜோர்ஜியா” மீதான ரஷ்யாவின் படையெடுப்பின்போது ரஷ்யாவின் ஆயுதபலம் குறைவாகவிருந்தமை வெளியுலகத்துக்கு தெரியவந்ததை தொடர்ந்து தனது ஆயுதபலத்தை அதிகரிப்பதற்காக அதிகளவு நிதியை ஒதுக்கியும், இராணுவத்துக்கான ஆட்பலத்தை அதிகரித்தும், விமானப்படைக்கும், கடற்படைக்குமான படைக்கலங்களை அதினவீனமாக்கியும் கொண்டுள்ள ரஷ்யா, “சிரியா” யுத்தத்தின்போது தான் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலும் தனது இராணுவ உத்திகளை மாற்றியமைத்துள்ளதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் படைகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள “T-14 Armata” ரக டாங்கிகளும், ரஷ்ய வான்படைவாசம் உள்ள, அமெரிக்காவின் அதிநவீன யுத்தவிமானமான “F-35” ரக விமானங்களுக்கு நிகரான “SU-57” ரக யுத்தவிமானங்களும் சர்வதேசத்தை கலங்கடித்துள்ளன. எனினும், சர்வதேச ரீதியில் குறுகியகால யுத்தமொன்றுக்கு மட்டுமே ரஷ்யாவால் தாக்குப்பிடிக்க முடியுமென கருதும் ஆய்வாளர்கள், தனது சொந்த ஆளுமைக்குக்கீழ் உள்ள பிரதேசங்களை முழுமையாக காத்துக்கொள்ளுமளவுக்கு பலம் பொருந்திய நாடாக ரஷ்யா வளர்ச்சி கண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.