ஆஸ்திரேலியாவில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர். இதை சுகாதார அமைச்சர் ஜென்னி மிக்காகோஸை (Jenny Mikakos) உறுதிப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளதாக சீன நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை குறைந்தது 10 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.
கொரோனா வைரஸால் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட புதிய 15 பேரும் வுஹானில்(Wuhan) இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் வுஹான் பிராந்திய தலைநகரான ஹூபே(Hubei) மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஆவார்.
மேலும், ஹூபே மாகாணத்தில் 180 புதிய நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டன் போஸ்ட்டின்(Washington Post) கூற்றுப்படி, இறந்தவர்கள் அனைவரும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் முன்னர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
உலகளவில் கிட்டத்தட்ட 1,300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, சீனாவை தாண்டி பிரான்ஸ், ஜப்பான், நேபாளம், சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி(AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.