இசைப்பிரியாவின் இறுதிக்கணங்கள்!

You are currently viewing இசைப்பிரியாவின் இறுதிக்கணங்கள்!

‘நந்திக் கடலோரம் எங்கள் தமிழ் வீரம் வந்து நின்று ஆடியது நேற்று……’ இது கவிஞர் புதுவையின் பாடல் வரிகள். அதே நந்திக்கரையில் நாதியற்று நடைபிணமாய் போனது தமிழ் இனம்.

விடுதலைப் போராளிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு மக்கள் தமது ஊரை இழந்து, உறவுகளை பிரிந்து, உணவின்றி, உடல் காயங்களுடன் இராணுவத்தின் ரவை மழையினுள் பாலஸ்தீனத்தின் நீண்ட பயணம் போல் பயணித்துக் கொண்டிருந்தனர்.

கரையோரங்களில் பல போராளிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தனர். ஆனால் அந்த வீரன் மிகத்தெளிவாக தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான ஆயத்தங்களுடன் நின்றிருந்தான்.

‘சரணாகதி’ என்பது சரித்திரத்தில் இல்லை என்பதே அவனது நிலையாக இருந்தது. அந்த வீரனுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்திருந்த அவனது வாழ்க்கைத் துணைவியான இசைப்பிரியாவும் அவனுடன் இணைந்தே கடைசிப் பயணத்தை செய்யவும் தயாராக நின்றிருந்தாள்.

ர

அந்த வீரன் தன்னை அழித்துக் கொள்வதற்காக சிறிய வகையிலான தற்கொலை அங்கியை அணிந்திருந்ததை அறிந்திருந்த அவனது வாழ்க்கைத் துணைவியான அவளும் ‘என்னையும் அணைத்தபடி வெடிக்க வையுங்கள்’ என கணவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இந்த ஆதர்ச தம்பதிகள் நின்றிருந்த இடத்திற்;கு அவளின் போராளிச் சகோதரி இசைப்பருதியும் அவளின் பொறுப்பாளரான மருதமும் செல்கின்றனர்.

சுக போராளிகளின் இழப்பு, மக்களின் துயரமான வாழ்வு, அமைப்பின் நிலை, மூத்த சகோதரியின் போராளிக் கணவனின் வீரச்சாவு, ஆதர்ஷ தம்பதிகளின் அழகிய குழந்தை  அகல்விழியின் இறப்பு என எண்ணங்கள் அலைமோத மௌனமே அங்கே மொழியானது. இரண்டு மாதங்களேயான அவர்களது அந்த பிஞ்சுக்குழந்தையான அகல் போதிய மருத்துவ வசதிகள் இன்மையினால் மூச்சடைப்பு காரணமாக மரணித்துப் போயிருந்தது. அந்த இழப்பிலிருந்து அவர்கள் அப்போதும் இயல்பிற்கு திரும்பி இருக்கவில்லை.

இராணுவ பக்கமிருந்து சன்னங்கள் சடசடத்துக் கொண்டேயிருந்தன. இசைப்பருதியின் கையின் மேல் பகுதியை ரவை தைத்துவிட்டது. ‘நீ காயப்பட்டு விட்டாய் ஒன்றும் செய்யமுடியாது மக்களோடு மக்களாக இராணுவப் பகுதிக்குள் போவென போராளி சகோதரியான இசைப்பருதியிடம் இசைப்பிரியா கெஞ்சுகிறாள். போராளி சகோதரி போகமறுக்கிறாள். பொறுப்பாளர் மருதத்தின் கண்டிப்பும் தமக்கையின் கெஞ்சலாலும் மனம் மாறி சம்மதிக்கிறாள். ‘வா உன்னை றோட்டுக்கு கொண்டு போய் அனுப்பி விடுகின்றோம் ‘என இருவரும் இசைப்பருதியை அழைத்து செல்கின்றனர்;.

“இசைப்பிரியா! நீயும் என்னோடு வந்து விடு” என கண்ணீருடன் கதறுகின்றாள தங்கை இசைப்பருதி. “இல்லை, நான் வரமாட்டேன், அகலும் எங்களுடன் இல்லை (இசைப்பிரியாவின் மகள்) ஐயோ! ஆமி என்னை ரேப் பண்ணிப்போடுவன். நான் வரமாட்டேன். எங்களிற்கு பாதை தெரியும்” என  கூறிய இசைப் பிரியாவிடமிருந்து கண்ணீருடன் பருதி அப்போது விடைபெற்றிருந்தாள்.

சகோதரியை வீதியில் கொண்டுவந்துவிட்ட பின் கரையில் நிற்கும் கணவனை தேடி, தோழி மருதத்துடன் ஓடிச்செல்கிறாள். கணவனை காணும் முன் கயவர்களின் கொடுர கரங்களில் சிக்கிக் கொண்டாள் இசைப்பிரியா. அவளிடம் அப்போது ஏற்கனவே வகுத்து வைத்திருந்த பாதைகளிற்கு மாற்று திட்டமேதும் இருந்திருக்கவில்லை. உலகின் தரங்கெட்ட அந்த இராணுவத்திற்கு எதிராக அவள் எழுதியும் குரல் எழுப்பியும் வந்திருந்தவள் என்பதால் சரணாகதி என்ற பேச்சிற்கே இடமில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்திருந்தாள். ஆனால் முன்னேறி வந்து பதுங்கியிருந்த படையினரிடம் அகப்பட்ட பின்னராக அவளிற்கு மாற்று வழிகளிகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
 
கடல் நீரில் விளக்கெரிக்கும் அதிசயத்துக்கு முதலில் சொந்தமான நந்திக்கடலில் ஈழத்து அருவி இசைப்பிரியா கைதாகின்றாள். இந்த நந்திக்கடலில் பண்டராவன்னியின் சகோதரி வன்னிநாச்சியார் தனது சகோதரனின் பிதுர்கடன்களை முடித்திருந்தாள். பண்டாரவன்னியன் அஸ்தி கலந்த அந்த புனித நீரில் இருந்தே கொலைக்களத்திற்கு அவள்  இழுத்து வரப்பட்டாள். மதுரையை எரித்துவிட்டு ஆவேசத்துடன் வந்தமர்ந்த வற்றாப்பளை நாயகி கண்ணகி தாயின் முன்னால் எங்கள் வன்னிமகள் சிதைக்கப்பட்டாள்.


இலச்சணக்கான மனித உயிர்களின் இறுதிமூச்சை வாங்கிய காற்று நந்திக்கடல் அலைகளில் மோதிக் கொண்டிருக்கையில் தேவதை போன்ற அழகிய இசைப்பிரியா கொரமாக கொல்லப்பட்டாள். அவள் கொல்லப்படும் போது  இரண்டு மாதமேயான குழந்தை அகலிற்கு பாலூட்டும் தாயாகவும் அவள் இருந்திருந்தாள். அவளது கணவனோ தகவலற்றிருக்கும் ஆயிரமாயிரம் போராளிகளுள் ஒருத்தனாகிப் போயிருந்தான்.
 
முல்லைத்தீவில் எல்லாமே பாழடைந்து விட்டது
மனிதர்கள் கட்டியதை
மனிதர்களே இடித்து விட்டார்கள்
மனிதர்களை மனிதர்களே
கொன்றும் எரித்தும் விட்டார்கள் ஆனால்
மனிதர்களைவிட மூத்ததும்
பெரியதுமான கடல்
எதனாலும் காயப்படாமல்
எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்
ஏக நிச்சயமாக
அது ஒரு தேவதையைப் போல
அழகிய கடல்
ஒரு முனிவரைப் போல
அமைதியானது …………


இது நிலாந்தனின் வன்னி மான்மியம். ஆனால், அழகிய கடல் ஆழிப் பேரலையாய் அகோரம் கொண்டது சொல்லித் தெரிய வேண்டிய தொன்றல்ல. அநியாயத்தையும் அக்கிரமங்களையும் பார்த்துக் கொண்டிருந்த  அந்தக் கடல் அன்னை, ஏழு சமுத்திரங்களும் இக்கொடூரங்களை  எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பாள். தாயகப் பயணத்தில் ‘ஒளிவீச்சு மூலம்  தன் முதல் தடத்தை பதித்த இசைப்பிரியா தனது இறுதிப் பாதச்சுவட்டையும் உயிரை உலுப்பி உலகத்தை உறைய வைக்கும் ஒளிவீச்சாய் உறகிப்போயிருக்கிறாள்.

துவாரகா கலைக் கண்ணன்

08-11-2013

(இன்று மே-02 இசைப்பிரியாவின் பிறந்த நாள்)

பகிர்ந்துகொள்ள