இணையத்தில் பாலியல் சுரண்டலுக்கு இலக்காகும் குழந்தைகள்…!

You are currently viewing இணையத்தில் பாலியல் சுரண்டலுக்கு இலக்காகும் குழந்தைகள்…!
ஒஸ்லோ:
உலகம் முழுவதும், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவர், இணையவலை பாவனையின்போது பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளதாக “UNICEF” வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
21 நாடுகளில், இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 21,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஐந்தில் ஒருவர் குறைந்தது ஒருமுறையாவது இணையவழி பாலியல் சுரண்டலுக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 1.5 கோடிக்கும் அதிகமானோர், தாங்கள் விரும்பாத பாலியல் உள்ளடக்கங்களைப் பார்க்க நேரிட்டதாகவும், சுமார் 90 லட்சம் குழந்தைகள், தங்களது விருப்பத்திற்கு எதிராக பாலியல் உரையாடல்களில் ஈடுபடவோ அல்லது படங்களைப் பகிரவோ கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 40 லட்சம் குழந்தைகளின் பாலியல் படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக, சுமார் 60 சதவீத சம்பவங்கள் Facebook, Instagram, Snapchat, TikTok மற்றும் WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் 14 சதவீதம் சம்பவங்கள் இணைய விளையாட்டுகளுடன் தொடர்புடையவை என மேலும் குறிப்பிடப்படுகிறது.
இதேநேரம், 57 சதவீத சம்பவங்களில் குழந்தைக்கு குற்றவாளியை ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதும், 38 சதவீதம் சம்பவங்களில் குற்றவாளியை குழந்தை முதன்முதலில் இணையம் மூலமாகவே சந்தித்துள்ளது என்பதும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட 40 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள், அது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான சம்பவங்களே காவல்துறை, சமூக சேவைகள் அல்லது உதவி அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன என மேலும் அறியமுடிகிறது.
இந்த சர்வதேச ஆய்வில் நோர்வே இடம்பெறவில்லை என்றாலும், நோர்வே குழந்தைகளும் இதேபோன்ற ஆபத்தை எதிர்கொள்வதாக, நோர்வேயின் குற்றவியல் ஆய்வு அமைப்பான “Kripos” புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுவதாக “UNICEF Norge” தெரிவித்துள்ளது.
UNICEF Norge-வின் பொதுச் செயலாளர் “Maria Greenberg Bergheim” கூறுகையில், நோர்வேயில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள் மேலும் வன்முறையானதாக மாறி வருவதுடன், பொருளாதார அழுத்தம் கொடுக்கும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இளைய வயதுடைய குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என எச்சரித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையத்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள், என்ன வகையான உள்ளடக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதில் விழிப்புடன் இருப்பது அவசியம் என இந்த ஆய்வு மீண்டும் எச்சரிக்கிறது.
03.09.2026
பகிர்ந்துகொள்ள

Leave a Reply