இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 61,408 பேர் பாதிப்பு!

You are currently viewing இந்தியாவில்  அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 61,408 பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் மனித குலத்துக்கு பரிசளித்து வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் கொரோனாவின் பரவல் வேகத்துக்கு அரசுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்படி ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா, இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61 ஆயிரத்து 408 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்து விட்டது. முந்தைய 24 மணி நேரத்தில்தான் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்திருந்தது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் 31 லட்சத்தையும் கடந்திருப்பதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இதைப்போல கொடூர கொரோனாவுக்கு, நாடு முழுவதும் மேலும் 836 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய 2 நாட்களைவிட சற்று குறைவாகும். ஏனெனில் முந்தைய 2 நாட்களில் 900-க்கும் அதிகமானோர் பலியாகி இருந்தனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 258 பேரும், தமிழகத்தில் 97 பேரும், ஆந்திராவில் 93 பேரும் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கர்நாடகம் (68), உத்தரபிரதேசம் (59) மேற்கு வங்காளம் (57), பஞ்சாப் (50), மத்திய பிரதேசம் (23) டெல்லி (16) குஜராத் (14), ராஜஸ்தான் (11), ஒடிசா (10) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மொத்தத்தில் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது. மொத்த எண்ணிக்கையிலும் மராட்டியம், தமிழகம் ஆகிய மாநிலங்களே முதல் 2 இடங்களை பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முறையே 22,253 மற்றும் 6,517 பேர் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் இழந்துள்ளனர்.

இதில் அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகம் (4,683), டெல்லி (4,300), ஆந்திர பிரதேசம் (3,282), உத்தரபிரதேசம் (2,926), குஜராத் (2,895), மேற்கு வங்காளம் (2,794), மத்திய பிரதேசம் (1,229) போன்ற மாநிலங்கள் உள்ளன. இதைப்போல பஞ்சாப்பில் 1,086 பேர், ராஜஸ்தானில் 955 பேர், தெலுங்கானாவில் 761 பேர், காஷ்மீரில் 617 பேர், அரியானாவில் 603 பேர், பீகாரில் 5,11 பேர் என பிற மாநிலங்களும் கணிசமான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 6,09,917 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 3 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 137 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு புதிய சாதனையை எட்டப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கையில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மரணங்களுக்கு, பல்வேறு இணை நோய்களே காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பகிர்ந்துகொள்ள