இந்தியா முழுவதும் இந்தியை திணிக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் வைகோ குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரை, பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டுள்ள மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில், நாடு முழுமையும் முஸ்லிம்களுக்கு எதிராக, கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிராக, தான்தோன்றித்தனமாக, அரசு அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதுடன், 35-ஏ பிரிவைத் திருத்தி உள்ளர்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ரோகிங்யா முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள், ஈழத்தமிழ் அகதிகளைச் சேர்க்காமல் தண்டித்து உள்ளார்கள். நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை ஏற்க முடியாது என 11 மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து விட்டன.
இந்த அரசு தமிழர்களுக்கு எதிரானது என நான் குற்றம் சாட்டுகிறேன். நமது பிரதமருக்கு திடீரென தமிழ் இலக்கியங்கள் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. திருக்குறளில் இருந்தும், அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டுவதால் மட்டுமே, தமிழர்களை ஏமாற்றி விட முடியாது.
தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள். காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள்.
இந்தி, சமஸ்கிருத மொழிகளை இந்தியா முழுவதும் திணிப்பதற்காக வஞ்சகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறீர்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன். உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? இந்தி மட்டுமே உள்ள இந்தியா வேண்டுமா?
இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது. பல்வேறு சமயங்கள், நூற்றுக்கணக்கான மொழிகள், மாறுபட்ட பண்பாடு, பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன. இந்தி, சமஸ்கிருத மொழிகளை நீங்கள் வலிந்து திணித்தால், சோவியத் யூனியன் சிதறியதைப் போன்ற நிலைமை இங்கேயும் ஏற்படும். 2047-ல், விடுதலையின் நூற்றாண்டைக் கொண்டாடுகிற வேளையில், இந்திய நில வரைபடம் மாறி விடும் என்று அவர் பேசினார்.