வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவில் எல்லைப்புறக் கிராமமாகக் காத்தார் சின்னக்குளம் அமைந்துள்ளது. இங்கு வாழுகின்ற மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்திற்கு அருகிற் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களால் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் நாள்தேறும் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள்.
இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த பின்னர் 17.01.1989 அன்று காலை 9.00 மணியளவில் இந்திய இரணுவத்தினர் கிராமத்துக்குள் திடீரென நுழைந்ததை உணராத மக்கள் தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ் இந்திய இராணுவத்தினர் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காலை உணவு உண்டுகொண்டிருந்தவர்கள், விவசாய அறுவடையில் ஈடுபட்டிருந்தவர்கள், கர்ப்பிணித்தாய், சிறுவர்கள் என இச்சம்பவத்தில் பதின்நான்கிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர். பல வீடுகள் எரியூட்டப்பட்டன.