இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாறிலங்களில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ள ஈழத்தமதிழர்களை சட்டவிரோத குடியேறிகளாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளமைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவ் அறிவிப்பை திரும்ப்பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து நிர்க்கதியான நிலையில் ஈழச்சொந்தங்கள் நிற்கிறார்கள்.
அவர்கள் இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா என ஏக்கத்தோடும், தவிப்போடும் 10 கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய் தமிழகத்தை நாடி வருகையில், அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அவமதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
இந்திய நாடு நாடாவதற்கு முன்பிருந்தே இந்த நிலத்தை ஆண்ட பேரினத்தின் மக்களை ஆரியக்கூட்டம் ஆதிக்கம் செய்ய முற்படுவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும். ஆகவே, ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூறி, அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மேலும் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டப்போராட்டமும், மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியும் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.