மட்டக்களப்பில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் அரச திணைக்களங்கள் ஊடாக துரிதமாக இடம்பெற்று வருவதாக அந்த மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மட்டக்களப்பு – மாவடிஓடை பகுதியில் இரவோடு இரவாக எல்லைக் கற்களை நாட்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வனவள திணைக்கம் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இவ்வாறான நடவடிக்கை தொடர்கிறது என அவா்கள் கூறுகின்றனர்.
நாங்கள் தூங்கச் சென்ற பின்னர் இரவோடு இரவாக எல்லைக் கற்களை நாட்டி விடுகிறார்கள். விடிந்து எழுந்து பார்த்ததும் எங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். பின்னர் அந்த நிலம் வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமானது எனக் கூறி எங்கள் நிலங்களுக்கும் செல்லும் உரிமை எமக்கு மறுக்கப்படுகிறது என மாவடிஓடை பகுதியைச் சோ்ந்த 51 வயதான மரிமுத்து ரவீந்திரகுமார் கூறுகிறார்.
இங்குள்ள மக்கள் பல ஆண்டுகள் நீடித்த யுத்தத்தால் இடம்பெயர்ந்து சமீப ஆண்டுகளிலேயே தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். எனினும் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் வசித்த, விவசாயம் செய்துவந்த நிலங்கள் அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மாவடிஓடை கிராமத்தில் தற்போது 36 தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனினும் இந்தக் கிராமத்துக்குச் செல்ல ஒழுங்கான வீதி இல்லை. 3 கிலோ மீற்றா்கள் நீளமான கிராமத்து வீதியைக் கடந்து செல்ல 45 நிமிடங்கள் ஆகும் என்கிறார் கிராம வாசியான ரவீந்திரன். இங்கு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலங்கள் உள்ளன. அதில் விவசாயம் செய்தே அவா்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர்.
ஆனால் வனவளத் திணைக்களத்தினர் இங்கு தினந்தினம் பிரச்சினை கொடுத்து வருகின்றனர். இங்குள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை என திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர் என ரவீந்திரன் தெரிவிக்கிறார்.
வனவளத் திணைக்கள அதிகாரிகளின் கெடுபிடிகளை விட யானைகளின் தொந்தரவையும் மாவடிஒடை கிராம மக்கள் தினந்தினம் எதிர்கொண்டு வருகின்றனர். யானைகளால் தினந்தினம் அச்சத்துடனேயே வாழ்க்கையைக் கழிப்பதாக அவா்கள் தெரிவிக்கின்றனர்.
சமீக காலங்களில் சில சக்தி வாய்ந்த தரப்புக்கள் எங்கள் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களைக் குறிவைத்து வருகின்றன.
கனரக இயந்திரங்களின் துணையுடன் எங்கள் கிரமத்துக்கு சமீபமாக வகை-தொகையின்றி மணல் கொள்ளையர்கள் மணலை அள்ளிச் செல்கின்றனர். இவா்களால் எங்கள் நிலம் பறிபோகுமோ என்ற அச்சமும் உள்ளதாக அவா்கள் கவலை வெளியிடுகின்றனர்.
சமீபத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டைத் தொடர்ந்து இங்கு மணல் அகழ்வை நிறுத்துமாறு மாவட்ட அரச அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மணல் வளம் நிறைந்த இந்தப் பகுதியில் தமது தேவைக்குக் கூட மணல் அள்ள இங்குள்ள மக்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கடந்தல்காரர்கள் பெருமளவு மணலை அள்ளிச் செல்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவா்கள் கூறுகின்றனர்.
மணல் சுரங்க நிறுவனங்கள் கிராமவாசிகளின் வறுமையை பயன்படுத்தி அவா்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இது எமது கிராமத்தில் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை என இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரான கனபதிபில்லை மோகன் தெரிவித்தார்.
மணல் மாபியாக்களை நாங்கள் இதுவரை சினிமா படங்களில் மட்டுமே பார்த்தோம். ஆனால் இங்கே அவற்றை நம் கண்களுக்கு முன்னால் பார்க்கிறோம். இந்த மணல் மாபியாக்கள் பலர் ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சில முக்கிய புள்ளிகளின் ஆசீர்வாதத்துடன் செயற்படுகின்றனர் என அவா் குற்றஞ்சாட்டுகிறார்.
மாகாணத்தில் மணல் அகழ்வு மோசமாக நடந்து வருவதை கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஒப்புக்கொள்கிறார். மணல் அகழ்வுக்கான உரிமம் வழங்கும்போது புவியியல் துறை அனைத்து காரணிகளையும் கவனத்தில் கொள்கிறது. ஆனால் உரிமத்தைப் பெற்றுக்கொண்ட சிலர் அதனை மீறி அதிகளவு மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் எனவும் ஆளுநர் தெரிவித்தார். தமிழர்களின் விவசாய நிலங்களை வனவளத திணைக்களம் கையகப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, சில சந்தர்ப்பங்களில் வனப்பகுதி எல்லைகளை புதிதாக வரையறை செய்யும்போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனவும் அவா் தெரிவித்தார்.
மக்கள் சிலர் வனப்பகுதிகளில் அத்துமீறி நிலங்களை ஆக்கிரமித்துள்ளமை குறித்த முறைப்பாடுகளும் உள்ளன எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின் மட்டக்களப்பில் நிலம் தொடர்பான மோதல்கள் அதிகரித்துள்ளன என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு தெற்கே சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவை ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பதவியேற்ற ஆறு மாதங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தார். இதுவும் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.
எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌர்த்தர்களாக காணப்படுகின்றமை குறித்து கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பாரம்பரிய தமிழர் நிலங்களை பௌத்த மயமாக்குவதே இந்தச் செயலணியின் சோக்கம் என அவர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பில் திட்டமிட்டே இனப்பரம்பலை சீா்குலைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ்சாட்டுகிறார்.
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கில் தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்கும் செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றன எனவும் அவா் தெரிவிக்கிறார்.என இந்திய இந்துப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு கரிபூசிய இப்பத்திரிகை தங்களின் தேச நலனனுக்கு ஆபத்து சூழ்ந்துவரும் நிலையில் ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு கரிசனை காட்டவெளிக்கிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.