இந்தோனேசியாவில் கொரோனாவால் 17 நாட்களில் 114 மருத்துவர்கள் பலி!

You are currently viewing இந்தோனேசியாவில் கொரோனாவால் 17 நாட்களில் 114 மருத்துவர்கள் பலி!

இந்தோனேசியாவில் டெல்டா வைரஸ் திரிவு வேகமாகப் பரவிவரும் நிலையில் இந்த மாதத்தில் 01 முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் கொரோனாவுக்கு 114 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 545 மருத்தவர்கள் உயிரிழந்தள்ளதாக இந்தோனேசியாவின் மருத்துவர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந்தோனேசியாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் 95 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர். எனினும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்களிடையே உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரித்துள்ளது தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சினோவாக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட மருத்தவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு ஊக்கியாக மற்றொரு மொடர்னா தடுப்பூசியைப் போடுவது குறித்து இந்தோனேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

உலகில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் டெல்டா திரிபு வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் தினசரி தொற்று நோயாளர் தொகை 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், உலகில் அண்மைய நாட்களில் பிரேசிலை அடுத்து அதிக கொரோனா மரணங்கள் இந்தோனேசியாவில் பதிவாகி வருகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் 44,721 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 1,093 பேரை கொரோனா பலியெடுத்தது.

தொற்று நோய் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசாங்கம் கடந்த ஜூலை 3 ஆம் திகதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியாகும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply