இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா மற்றும் மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு கருதி ஜகார்த்தா நகரின் பல்வேறு இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளம் காரணமாக ஜகார்த்தாவின் உள்நாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எனவே, விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20,000 பயணிகள் தவிக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகி உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.