இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதி யுத்த காலப்பகுதிகளில் 40ஆயிரம் தமிழ் மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்ற நிலையில், இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற ஐ.நாவின் யோசனையையும் பொன்சோக முற்றாக நிரகாரித்ததோடு, இதுபோன்ற யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் வளர்ச்சியடைவில்லை எனவும் தெரிவித்துள்ள பொன்சேகா, எனவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வைத்து இராணுவத்தை மதிப்பிடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொலை செய்யப்படவோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெறவோ இல்லை. ஆனால் ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இச்சம்பவங்கள் தொடர்பான உடனடி விசாரணைகளை மேற்கொண்டிருந்தால் இராணுவம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்திருக்காது எனவும் தெரிவித்தார்.