அண்மையில், “தந்தை செல்வா” நினைவு மண்டபத்தில், மாகாணசபைச்சட்டம் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆய்வரங்கொன்று நடத்தப்பட்டிருந்தது. அழைக்கப்பட்ட சுமார் 19 பிரமுகர்களைத்தவிர, விரல்விட்டு எண்ணக்கூடியது என்று சொல்லும் அளவுக்கும் குறைவாகவே அரங்கில் பார்வையாளர்கள் இருந்ததை புகைப்படங்கள் எடுத்தியம்பின. இதை திரும்பவும் ஒருமுறை குறிப்பிடுவதால் சிலருக்கு அதீதமான நெஞ்சுவலி எழலாம். குறிப்பாக, யாழிலிருந்து வெளிவரும் ஊடகங்களுக்கு, அதிலும் குறிப்பாக “ஈழநாடு” பத்திரிகைக்கு எழலாம். அதற்காக, மக்களுக்கு அந்தந்த நேரத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்லா விட்டால், அதாவது, “ஈழநாடு” பத்திரிகையின் தாரக மந்திரமான, “ஏசுவார்கள், எரிப்பார்கள்; அஞ்சவேண்டாம்! உண்மையை எழுதுங்கள்; உண்மையாய் எழுதுங்கள்!!” என்ற யோகர் சுவாமிகளின் வாக்கியங்களை “ஈழநாடு” கடைப்பிடிக்கிறது இல்லையோ, ஒரு தமிழ்த்தேசிய ஊடகமாக நாம் கடைப்பிடிக்காமல் விட்டால் அது வரலாற்றுத்தவறாகிவிடும்.
குறித்த ஆய்வரங்கு தொடர்பில் “Facebook” சமூகவலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்தொன்றுக்கு “ஈழநாடு” பத்திரிகையின் “இப்படியும் நடக்கிறது” என்ற பத்தியில் வெளிக்காட்டப்பட்ட எதிர்வினையில், சட்டத்துறை விரிவுரையாளரான திருமிகு. கோசலை மதன் அவர்கள், அந்த ஆய்வரங்கில் ஆற்றிய உரைக்கு எதிர்க்கருத்தே வைக்க முடியாது என்கிற தோரணையிலும், ஆனானப்பட்ட கோசலை அம்மையாரே சொல்லிவிட்டார்; 13 ஐயும், மாகாணசபையையும் தமிழர்கள் ஏற்றுக்கொண்டே ஆக்கவேண்டுமென்கிற தோரணையிலும், இரு நாட்களாக “ஈழநாடு” எடுத்த ஆத்தலே இதை எழுதத்தூண்டியது.
குறித்த ஆய்வரங்கில் பேச அழைக்கப்பட்ட சட்டத்துறை விரிவுரையாளர் திருமிகு. கோசலை மதன் அவர்கள் ஆற்றிய உரையின் உள்ளடக்கம் பேசுபொருளாகியிருந்தது. அவரது உரையை விமர்சிப்பது இங்கு நோக்கமல்ல. ஏனெனில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்திருந்தார். ஒரு சட்டத்துறை விரிவுரையாளராக, 1987 /88 இல் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட மாகாணசபை முறைமையில் என்ன இருக்கிறது என்பதை பேசும்படி கேட்கப்பட்டதால் அல்லது பணிக்கப்பட்டதால், தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்பிலும், தமிழ் மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும் நம்பிக்கை தரும்படியாக தனது உரையை அமைத்திருந்தார். எனினும், அவரது உரையானது, 13 ஆவது திருத்தச்சட்டமும், மாகாணசபை முறைமையும், தமிழர்களின் ஒப்புதலோ இணக்கப்பாடோ இல்லாமல், இலங்கை – இந்திய அரசுகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட சட்ட விதிகளையும், விதந்துரைகளையும் அடிப்படையாக கொண்டது மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவரது உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்ததில், “ஈழநாடு” க்கு என்ன நட்டமோ, சீறிச்சினக்க முற்படுகிறது. மேற்குறிப்பிட்ட, “ஈழநாடு”வின் சினத்துக்கு காரணமான “Facebook” சமூக வலைத்தளத்தின் பதிவில், திருமிகு. கோசலை மதன் அவர்கள் இன்று வகிக்கும் பதவியை முன்னதாக வகித்திருந்த முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர் திருமிகு. குருபரன் அவர்கள், 13 ஆவது திருத்தச்சட்டத்திலும், மாகாணசபை முறைமையில் உள்ள பாதகங்களை முன்பொரு சந்தர்ப்பத்தில் விளக்கியிருந்தமையை குறிப்பிட்டிருந்தமை “ஈழநாடு”வுக்கு என்ன இடைஞ்சலை கொடுத்ததோ தெரியவில்லை, திருமிகு. குருபரன் அவர்கள் தெரிவித்திருந்த ஆழமான கருத்துக்களை மறுத்தும், திருமிகு. கோசலை மதன் அவர்களது உரையே உண்மையானது என்றும் நிறுவ பாடாய்ப்படுகிறது. அதனால், ஆய்வரங்கத்தில் திருமிகு. கோசலை மதன் அவர்கள் ஆற்றிய 22 நிமிட உரையை மீண்டும் கவனமாக பார்த்து / கேட்டு, அவரது உரையிலிருந்தே கீழ்வரும் குறிப்புக்களை மக்கள் பார்வைக்கு கொண்டுவருகிறோம்.
மாகாணசபை சட்டத்தையும், அதன் ஏற்பாடுகளையும் தான் எப்படி புரிந்து கொண்டுள்ளாரோ, அந்தக்கோணத்திலேயே அதுபற்றிய விளக்கத்தை தான் அளிப்பதாக, தனது உரையின் ஆரம்பத்திலேயே திருமிகு. கோசலை மதன் அவர்கள் குறிப்பிடுகிறார். ஆக, அவரது புரிதல் மட்டும்தான் சரியானதாக இருக்கவேண்டும் என்ற நியதி எப்போதும் இல்லை. அவர் சட்டத்துறை விரிவுரையாளர், அதனால் அவர் சொல்வதுதான் சரி என்ற வாதம் சரியானால், அவருக்கு சற்றேனும் குறையாத, அவரை விட சட்டத்துறை விரிவுரையாளராக மேலும் அனுபவம் கொண்ட திருமிகு. குருபரன் அவர்கள், மேற்படி விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் எப்படி தவறாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
திருமிகு. கோசலை மதன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்ட விடயங்களை இலகுபடுத்தி கீழே தருகிறோம்:
- மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து, இலங்கைக்கு மாகாணசபை தேவையா என எழுந்திருந்த கேள்வி, இன்று மிக ஆழமாகவும், கடுமையாகவும் மீண்டும் பேசப்படுகிறது; குறிப்பாக தென்னிலங்கையில் பேசப்படுகிறது என அம்மையார் தனது உரையில் குறிப்பிடுகிறார். அதுவும், இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாஸ காலத்திலிருந்தே, மாகாணசபைகள் அதிகாரங்கள், குறிப்பாக வடக்கு – கிழக்கிற்கென சொல்லப்பட்ட அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு, மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கப்பட்டு, வடக்கு – கிழக்கிற்கு எவ்விதமான காத்திரமான அதிகாரங்களும் இல்லை என முன்னாள் வடமாகாணசபை முதல்வராக முழுதாக ஐந்து வருடங்கள் அப்பதவியை ஆண்டு, அனுபவித்து வந்த திருமிகு. விக்னேஸ்வரன் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் நிலையிலும், மாகாணசபைகள், அதாவது வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கு மாகாணசபைகள் தேவைதானா என்கிற விவாதம் தென்னிலங்கையில் உச்சம் பெற்றிருக்கின்றன என்றால், தமிழர்களுக்கான எவ்விதமான அடிமட்ட அதிகாரங்களையும் தருவதற்கு தென்னிலங்கை தயாராக இல்லை என்பதே இங்கு பொருள்.
- இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நீட்சியாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒத்துக்கொள்ளப்பட்டிருந்த நிபந்தனைகள் இன்று முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன என்பதை அம்மையார் ஒப்புக்கொள்கிறார். ஆனால், இந்த நிபந்தனைகள் மீறப்பட்டது இனவாத மத்திய அரசுகளால் மாத்திரமே என்பதையும் அம்மையார் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அதை மறந்துவிட்டார். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டமையாலேயே, மாகாணசபை முறை, இலங்கை அரசியல் சட்டத்தை மீறுகிறது என்ற அடிப்படையிலே இணைக்கப்பட்ட வடக்கும், கிழக்கும், இலங்கை உயர்நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டது என்பதையும் அம்மையார் ஒப்புக்கொள்வதை இங்கு கவனிக்க வேண்டும். ஆக, இணக்கப்பாடுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையில் ஒத்துக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் எதிர்காலத்திலும் இலகுவாக மீறப்படும்போது, மாகாணசபைகளின் அதிகார வரம்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு செல்லுபடியற்றதாக ஆக்கப்படும் நிலை வரும் வாய்ப்புக்களை மறுதலிக்க முடியாது.
- மாகாணசபை முறைமை என்பது தமிழர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டது அல்ல. இந்திய அழுத்தத்தின் உச்சமாக இலங்கை சட்டத்துக்குள் மாகாணசபை சட்டம் திணிக்கப்பட்டது. மாகாணசபை முறைமை, தமிழர்களுக்கான தீர்வு என, ஆய்வரங்கில் உரையாற்றிய எவரும் ஒத்துக்கொள்ளவில்லை எனவும் ஒப்புக்கொள்ளும் அம்மணி, மாகாணசபை என்பது, தீர்வுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டபின் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிடுகிறார். இங்கேதான் முக்கியமாக ஒரு திருத்தத்தை அம்மணி கவனிக்க வேண்டும். 13 ஆவது திருத்தச்சட்டமோ அல்லது மாகாணசபை முறைமையோ தமிழர் தரப்பால் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழர் தரப்பை கலந்தாலோசிக்காமல் இலங்கை – இந்திய தரப்புக்கள் மட்டும் தங்களுக்குள் பேசிவிட்டு, தமிழர்கள் மீது திணித்த விடயங்களே இவை என்பதை அம்மணி மறக்கக்கூடாது. அதுவும், குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை தயவு செய்து நடைமுறைப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என, முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் ரஜீவ் காந்திக்கு, அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சம்பந்தன், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் கடிதமெழுதியிருந்தமையும் வரலாறு. தவிரவும், அம்மணி கலந்து கொண்ட ஆய்வரங்கத்தை தமிழ்மக்கள் புறக்கணித்தமையை வைத்தே, தமிழ்மக்களின் மனவோட்டம் என்ன என்பதை அம்மணியால் புரிந்துகொள்ள முடியும்.
- சமஷ்டி பற்றிய தெளிவான தன்மை, ஆரம்பத்திலிருந்தே தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இருந்து வந்தது. இலங்கைக்கான அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலருந்தே சமஷ்டிக்கான இறுக்கமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு காலகட்டங்களிலும் கொண்டுவரப்பட்ட, இலங்கை அரசியல் சட்ட வரைபுகள் முன்மொழியப்பட்ட போதெல்லாம் சமஷ்டியின் தேவை, தமிழர் தரப்பிலிருந்து தெளிவாக சொல்லப்பட்டது என்பதையெல்லாம் ஒப்புக்கொள்ளும் அம்மணிக்கு, சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே சரியானதும் நியாயமானதும் என்கிற புரிதல் அப்போதிருந்தே தமிழர் தரப்புக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகியிருக்க வேண்டும்.
- தற்போதும்கூட புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒற்றையாட்சி என்கிற பதத்தை நீக்குவதற்கு தென்னிலங்கை இணங்காது என்பதும், “சமஷ்டி” என்கிற பதத்தை உள்வாங்கி, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்பதும் அம்மணியின் புரிதலாக இருக்கும் நிலையில், எனவே, 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபை முறைமையை மீண்டும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் என்கிறார். சீர்தூக்கிப்பார்ப்பதற்கு இன்றைய நிலைமையில் காத்திரமான வகையில் என்னதான் இருக்கிறது என்பதை அம்மணியால் நியாயமாக விளக்க முடியுமா என்பது சந்தேகமே.
- தமிழர்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்பு, மாகாணசபை முறைமையில் தான் உள்ளது. கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தமிழர்கள் தங்களை கட்டியெழுப்புவதற்கு மாகாணசபை சட்டத்தில் இடமிருக்கிறது என விளக்குகிறார் அம்மணி. எல்லாம் சரிதான். அனால், மாகாணசபை சட்டத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை மத்திய அரசே மீறுகின்ற நிலையில், அது இலங்கை அரசியல் சட்டத்துக்கு முரணானது என இலங்கை உயர்நீதி மன்றமே தீர்ப்பளிக்கும்போது, தொடர்ச்சியாக இப்படியான நிபந்தனை மீறல்கள் நடைபெறும்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் மாகாணசபைகளுக்கு ஆப்பு வைப்பதுபோல் இருக்கும் என்பதுவே எதிர்பார்ப்பாய் இருக்கும் நிலையில், பொருளாதார ரீதியாக நலிந்து போயிருக்கும் தமிழ்ச்சமூகத்திடம் நிழலாகவே இருக்கும் அதிகாரங்களை சொல்லி போலியான நபிக்கையை வளர்ப்பது அறமாகாது.
- மாகாணசபைகள் சுயாதீனமாக இயங்கக்கூடியவை அல்ல. ஏனெனில், மாகாணசபை முறைமை, இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என இலங்கை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இலங்கையின் ஒற்றையாட்சி தத்துவத்துக்கு எதிரானதென்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது, மாகாண சபைகள் துணைநிலை அமைப்புக்கள்தான் என இலங்கை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. எனவே, மாகாணசபைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமல்லாமல், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழும் இயங்க வேண்டும் என்பதான் தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் அம்மணி. இதைப்பற்றி நாம் அதிகம் விளக்க வேண்டிய தேவையில்லை. இதே இலங்கை உயர்நீதிமன்றம்தான், வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது இலங்கை அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, இணைக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் பிரித்தது என்பதும், மாகாணசபைகள் சுயாதீனமாக இயங்க முடியாதென்றும், அவற்றுக்கு காணி / காவல்துறை அதிகாரம் கிடையாதென்பதையும் 32 தடவைகளுக்கு மேல் உறுதிப்படுத்தியிருக்கிறது என்பதும் வரலாறுகள் என்பதை அம்மணிக்கு நினைவுபடுத்துகிறோம்.
- பல்வேறு சந்தர்ப்பங்களிலே மாகாணசபைகள், மத்திய அரசின் பாராளுமன்றத்துக்கும், நிர்வாகத்துறைக்கும் கட்டுப்பட்டு, கீழ்ப்படிந்து தன்னுடைய செயற்பாடுகளை செய்யவேண்டிய தேவை இருக்கிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்ளும் அம்மணி, மாகாணசபைகளால் ஓரளவுக்காவது சுயாதீனமாக இயங்கக்கூடிய வகையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சட்ட விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன எனவும், மாகாணசபை சட்டத்தின் “மாகாணசபை நிரல்கள்” என்பதன் கீழ், 37 விடயங்கள் தொடர்பில் மாகாணசபைகள் சட்டமாக்குவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும், கமநல சேவைகள், உள்ளூராட்சி அதிகாரங்கள், கல்விச்சேவைகள் உள்ளிட்ட அந்த 37 விடயங்கள், தமிழர்களின் இன்றைய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதற்கான சட்டங்களை ஏற்படுத்தும் வெளியை ஏற்படுத்தி தருகின்றன எனவும், ஆனாலும், நடைமுறை அனுபவங்கள், இந்த சுதந்திரத்தில் மாகாண ஆளுநர், தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி தலையீடு செய்ய முடியும் என்பதை காட்டி நிற்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆக, எந்நிலையிலும் மாகாண ஆளுநர் மாகாணசபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கலாம் என புரிந்துகொள்ளலாம்.
- மாகாணசபைகள் நியதிச்சட்டங்களை இயற்றுகிறபொழுது, மாகாண ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மாகாண ஆளுநர் ஒப்புதல் வழங்காவிடின், நியதிச்சட்டங்களை இயற்றுவதில் மாகாணசபைகள் கடுமையான இடர்களை சந்திக்கும். இதனாலேயே, மாகாணசபைகள் சட்டங்களை இயற்ற முடியாத அனுபவங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்தன என, கடந்தகால பட்டறிவுகளை நினைவுகூரும் அம்மணி, அதேவேளை, மாகாண ஆளுநர், மாகாணசபைகளின் நியதிச்சட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அந்த நியதிச்சட்டங்களின் அரசியலமைப்பு தன்மை தொடர்பாக ஜனாதிபதிக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் கோரிக்கைகளை அனுப்பி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக்கேற்ப, குறித்த நியதிச்சட்டங்களுக்கு அனுமதி வழங்குவதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை மாகாண ஆளுநர் எடுக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார். எனினும், அரசியல் சட்டவிதிகளின்படி, மாகாணசபைகள், மாகாணசபை நிரல்களின் கீழ் சட்டங்களை இயற்றிக்கொள்ள முடியும் எனவும், மாகாணசபை நிரல்களிலே காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் மத்திய அரசும் சட்டம் இயற்றவும் முடியும் எனவும் முரணான விடயங்களை முவைக்கிறார். ஆனாலும், மாகாணசபைகளோடு கலந்தாலோசித்த பின்பே மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் எனவும் குறிப்பிடும் அம்மணி, மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் மாகாணசபைக்கு ஒப்புதலாக இல்லாதவிடத்து, மாகாணசபைகள் அவற்றை நிராகரிக்க முடியும் எனவும், சில விடயங்களில் மாகாணசபைகளும், மத்திய அரசும் சட்டங்களை இயற்ற முடியும் எனவும், எனினும், மாகாணசபையும், மத்திய அரசும் குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பில் முரண்பாடான சட்டங்களை இயற்றும்போது, மாகாணசபை, மத்திய அரசின் சட்ட இயற்றுதலை புறக்கணிக்க சட்டத்தில் இடமுண்டு எனவும் சொல்கிறார். மாகாணசபைகளானாலும், மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை மாகாண சபைகள் நிராகரிக்க வாய்ப்பிருக்கிறதா எனவும், அந்நிலை வரின் மத்திய அரசு, குறித்த மாகாணசபையை இல்லாதொழிக்கும் வாய்ப்பு ஏற்படாதா என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது.
- மாகாணசபைகள் தமக்கு வழங்கப்பட்ட விடயங்களில் சட்டங்கள் இயற்றும் போது, அவை, மத்திய அரசின் நாடாளுமன்ற சட்டங்களுக்கு மேலானவையாக பார்க்கக்கூடிய விதத்திலே 13 ஆவது திருத்தத்திலே சில ஏற்பாடுகள் இருக்கின்றன. இந்த ஏற்படுகளை தமிழர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது எனச்சொல்லும் அம்மணி, சில விடயங்களில் மத்திய அரசைவிட மாகாணசபைகள் அதிகாரம் மிக்கவை எனசொல்ல வருகிறாரா எனபதை அம்மணியின் கவனத்துக்கே விட்டுவிடலாம்.
- முழுமையான காணி / காவல்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்கு இல்லை. எனினும், சில சொற்ப விவகாரங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை ஏற்படுத்திக்கொள்ள மாகாணசபைகளுக்கு அதிகாரம் உண்டு. மாகாண டி.ஐ.ஜி. யை நியமிப்பதற்கு மாகாண முதல்வரின் அனுமதி தேவை. மாகாணசபைகளுக்கான காவல்துறை கட்டமைப்பை முன்னெடுப்பதற்கான வெளி, 13 ஆவது திருத்த சட்டத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மாகாண காவல்துறை அலகிலே, மத்திய காவல்துறையை சேர்ந்தவர்களும் பணியாற்ற முடியும் என அம்மணி விளக்குவதில் இருந்து ஒரு விடயத்தை புரிந்துகொள்ள முடியும். அதாவது, மாகாண முதல்வராலும், மாகாண காவல்துறை அலகாலும் நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளை மத்திய அரசு அங்கீகரிக்க விரும்பாத நிலையில், மத்திய அரசின் / மத்திய காவல்துறை அலகின் அதிகாரிகள் மாகாண காவல்துறையில் மேலாதிக்கம் செய்ய முடியுமென புரிந்துகொள்ளலாம். இதேவேளை, மாகாண காவல்துறை அமைப்பிலே கீழ்நிலை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் மாகாண காவல்துறை ஆணைக்குழுவுக்கு இருந்தாலும், அதில் பாரிய கட்டுப்பாடுகள் உள்ளன எனவும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார விடயங்களில் மத்திய காவல்துறைக்கே அதிகாரங்கள் உள்ளனவேயன்றி மாகாணசபைகளுக்கல்ல எனவும் ஒப்புக்கொள்ளும் அம்மணி, மாகாணசபைகளின் காவல்துறை அலகுகளுக்கு மிகக்குறைந்த, அடிமட்ட நிலையிலுள்ள அதிகாரங்களே உள்ளன என்பதை மறைமுகமாக சொல்கிறார் என்றே எடுத்துக்கொள்ள முடியும்.
- மாகாணசபைக்கு தேவைப்படுகிற பட்சத்தில், குறித்த மாகாணத்திலுள்ள அரசகாணிகளை மாகாணசபை பயன்படுத்தலாம் (Shall). எனினும், மாகாணசபையின் ஆளுமைக்குள்ளிருக்கும் அரச காணியை மத்திய அரசு பயன்படுத்தலாம் (May) என அம்மணி சொல்வதெல்லாம் கேட்பதற்கு குளிர்மையாக இருக்கலாம். ஆனாலும், தமிழர் தாயகமெங்கும், தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து 1000 விகாரைகள் அமைக்கும் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றி வரும் மத்திய அரசு (இப்போதைய ரணில் அரசு) “Shall / May” எல்லாவற்றையும் மதித்து இடையூறில்லாமல் காரியங்களை முன்னெடுக்க அனுமதிக்கும் என தமிழர்கள் நம்புவதற்கு தயாராகவில்லை.
- முன்னாள் வடமாகாண முதல்வரை முன்னிலையில் வைத்துக்கொண்டு, மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என சொன்னதற்கு அம்மணியை பாராட்டத்தான் வேண்டும். அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டமும், மாகாணசபை சட்டமும் தந்துள்ள சட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள எத்தனிப்பதன் மூலமாக, தமிழர்கள் தங்களது நிர்வாகத்திறனையும், ஆட்சித்திறனையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என அவர் சொன்னதிலிருந்து ஒரு கேள்வி எழுகிறது. அப்படியாயின், திருமிகு. விக்னேஸ்வரன் முதல்வராக இருந்தபோது இவையெல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாதவராக, கையாலாகாத முதல்வராகத்தான் இருந்தாரா என்ற கேள்வி எழுவதோடு, அம்மணி சொல்லும் சட்டங்களெல்லாம் இப்போதும் மாகாணசபைகள் வசம்தான் இருக்கின்றனவா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. ஏனெனில், மாகாணசபை முறைமையை தமிழ்மக்கள் மட்டுமில்லாமல், தென்னிலங்கையும் கூடவே எதிர்த்துவரும் நிலையில், இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முதலாவது முதல்வர் திரு. வரதராஜப்பெருமாள், மாகாணசபையை வைத்து ஒரு தும்பைத்தானும் நகர்த்த முடியாது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு இந்தியா சென்றதன் பின்னான காலப்பகுதியில் படிப்படியாக குறைக்கப்பட்ட மாகாணசபைகள் அதிகாரங்களை வைத்து எதையும் ஆக்கபூர்வமாக நகர்த்த முடியுமா என்பதை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
- தமிழர்கள் எதிர்பார்க்கும் சமஷ்டி எப்படியானது, என்பது பற்றிய தெளிவை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுதி, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் திட்ட்ங்கள் தொடர்பில் தமிழர்கள் தம்மை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அம்மணியின் கருத்து வரவேற்கத்தக்கதே. எனினும், இப்போதுள்ள மாகாணசபை முறைமையையும், 13 ஆவது திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டு பயணிப்பதன் மூலம், தமிழர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் உச்சபட்ச அதிகாரம் கைகளில் கிடைக்கும்போது அதை வினைத்திறனோடு செயற்படுத்தும் திறமை படைத்தவர்களாக தமிழர்கள் மாற முடியும் என்கிற கருத்தோடு ஒன்றிப்போக முடியவில்லை. ஏனெனில், மாகாணசபை சட்டங்களை வைத்து, சுயாதீனமாக ஏக்கருமத்தையும் ஆற்ற முடியாதென இரு முன்னாள் முதல்வர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பின்னும், மாகாணசபை மற்றும் 13 ஐ ஏற்கவேண்டும் என, அறிவுசார் சமூக பிரதிநிதியாக இருக்கக்கூடிய திருமிகு. கோசலை மதன் அம்மையார் சொல்வது முரணாக இருப்பதோடு, குறித்த இரு முன்னாள் முதல்வர்கள் மீதும் விமசனங்களை வைக்க வழிசமைக்கிறது.
- பிரிக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கான சட்ட ஏற்பாடு இருக்கிறது. அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது. இணைக்கப்பட்ட வடக்கையும் – கிழக்கையும் தொடர்ச்சியாக இணைத்தே வைத்திருக்கின்ற அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது என அம்மையார் சொல்வதிலிருந்து இன்னொரு கேள்வி எழுகிறது. அம்மையார் சொல்வது சரியெனில், வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது தவறான அடிப்படையில் என உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்தபோது நாடாளுமன்றம் ஏன் ஏதிவினையாற்றவில்லை என்கிற கேள்வியோடு, இனியும் மத்திய அரசு வடக்கையும், கிழக்கையும் இணைத்தால், அரசே உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக ஆகிவிடாதா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
- இப்போது இருப்பவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாதவர்களாக தமிழர்கள் இருந்தால், மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் தவறிவிடும். இருப்பவற்றை சரியாக பயன்படுத்திக்கொண்டு, இல்லாதவற்றை கேட்டுப்பெறும் தகைமைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும். இந்த தகைமைப்படுத்துதலுக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் பயனுள்ளதாக இருக்கும். 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம், பயனுள்ள நியதிச்சட்டங்களை ஆக்க முடியும். அதனூடாக, போருக்கு பின்னான, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள தமிழர்கள், பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும் என்பதோடு, அடுத்த கட்ட அரசியல் தீர்வு நோக்கி செல்ல முடியும் என்பவை அம்மணியின் உரையில் முத்தாய்ப்பாக சொல்லப்பட்ட விடயங்கள். இருப்பதை பயன்படுத்துவது என்பது சரிதான்; பயன்படுத்துவதற்கு ஆக்கப்பூரமாக அப்படி என்னதான் உரிமைகள் இருக்கின்றன என்பதுதான் சாமானியனின் கேள்வி. அதுவும், படிப்படியாக பறிக்கப்பட்டு, எதுவித அதிகாரமுமில்லாத, அதாவது முன்னாள் வடமாகாண முதல்வர் திருமிகு. விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு இருக்கையைக்கூட சுயமாக வாங்க முடியாத மாகாணசபை சட்டத்தை வைத்து எதை தமிழர்கள் தங்களின் தகைமையாக்கிக்கொள்வது என்பது தெரியவில்லை. தவிரவும், அதிகாரமேதுமில்லாத 13 / மாகாணசபை முறைமையை தமிழர்கள் மேல் திணித்து, தமிழர்களுக்கான தீர்வாக, இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழர்கள் 13 ஐயும், மாகாணசபையையும் தங்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என அரசியல் சட்டத்தில் பதித்துவிட்டு தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையே அடித்து மூடுவதற்கு இனவாத இலங்கை அரசு காத்திருக்கும் நிலையில், ஒன்றுமில்லாத மாகாணசபையையும், 13 ஐயும் ஏற்றுக்கொண்டு, தமிழர்கள் அடுத்தகட்ட அரசியல் தீர்வு நோக்கி செல்லவேண்டும் என்பதெல்லாம் ரசிக்கும்படியாக இல்லை.