இறையாண்மை (Sovereignty): என்றால் என்ன?

You are currently viewing இறையாண்மை (Sovereignty): என்றால் என்ன?

இறையாண்மை என்ற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. ‘தேசம்’ என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.

ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள், தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேசிய இன மக்களுக்கே இறையாண்மை உடைமையானது என்பதும் தான் இன்றைய உலகளாவிய அரசுமுறைகளின் சாரம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியின் சிதறிக்கிடந்த பகுதிகளெல்லாம் இணைக்கப்பட்டு ஜெர்மனி என்ற ஐக்கியப்பட்ட தேசம் 1871 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அது போலவே இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்டு இத்தாலி தேசம் (1871) உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல தனித் தேசங்கள் எழுந்தன. 1924 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 26 நாடுகள் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் (1939-1945) நாடுகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. முன்பு இருந்த பல்தேசிய இன நாடுகளிலிருந்து மொழியடையாளத்துடன் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தங்கள் தாயக நிலப்பரப்பின் மீது தனித்தேசங்களைப் படைத்துக் கொண்டதால் விளைந்தது. அந்த தேசங்கள் இறையாண்மை கொண்ட தேசங்களாக விளங்குகின்றன.

இன்றைய அரசு முறைகளின் அடிப்படைக் கூறுகள் இரண்டு :

1. ஜனநாயகம் (மக்களுக்கே அதிகாரம்)
2. தேசிய இனங்களுக்கே இறையாண்மை

பல தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனநலன் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், தன் இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தன் தாயகத்தை அந்த பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனித்தேசத்தைப் படைத்துக் கொள்ளும். இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை.

இனத்தின் இறையாண்மை – நாட்டின் இறையாண்மை

ஒரு பல்தேசிய நாட்டில் உள்ள தேசிய இனங்கள் தனித்துப் போக விரும்பினால், அதை அனுமதிப்பது தான் ஜனநாயகம். வாக்குரிமை அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உதிரிகளாக உடன் வைத்துக் கொண்டு, ஜனநாயக முத்திரையுடனேயே, ஒரு பெருந்தேசிய இனம் தன் நலத்திற்கு ஏற்ப சட்டங்களை நடைமுறை படுத்துவதும், எதிர்க்குரல் எழுப்பும் தேசிய இனங்களை சட்டங்களின் மூலமும், படைபலம் மூலமும் நிர்மூலம் செய்வதும் ஜனநாயகத்தின் பேரால் நடைமுறைப்படுத்தப்படும் எதேச்சாதிகாரமே ஆகும். இதுதான் இந்திய ஒன்றியத்திலும், சிறிலங்காலும் நடந்து கொண்டு வருகிறது.

ஒடுக்கப்படும் தேசிய இனத்தில் தேர்தல் கட்சிகளாக இருந்து கொண்டு நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் ஒடுக்கும் தேசிய இனத்தின் சர்வாதிகார முகத்துக்கு ஜனநாயக முகமூடி அணிவித்து விடும் வேலையை மட்டுமே செய்கிறார்கள் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு தேசிய இனம் பிரிந்து சென்றால் ஒரு நாட்டின் இறையாண்மை என்னாவது என்ற கூக்குரலே பொருளற்றது என்பதை சில வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு புரிய வைக்கலாம்.

ஒரு இனத்துக்குத்தான் இறையாண்மை சொந்தமானது. அந்த இறையாண்மை, அது வாழும் நாட்டினுடையதாக உணரப்படும். ஒரு இனம் நிலையானது நாடு (State) என்பது அழியக்கூடியது, மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. ஒர் இனம் தனது நாட்டை இழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் கூட அதன் இறையாண்மை அதனுடனேயே இருக்கிறது. அந்த இனம் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்க்கிக் கொள்ளும் போது, அந்த நாடு இறையாண்மை மிக்க நாடாக விளங்குகிறது.

தங்கள் தாயகத்தை இழந்து உலகம் முழுவதும் உரிமைகள் இழந்து பரவிக் கிடந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948-இல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் என்ற அதுவரை உலக வரைபடத்தில் இல்லாத, ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்ரேல் இன்று ஒரு இறையாண்மை மிக்க நாடு. இந்த இறையாண்மை, இதுவரை வரைபடத்திலேயே இல்லாதிருந்த இஸ்ரேலுக்கு எங்கிருந்து வந்தது, அது ஒரு இனத்திற்கே உரித்தான, பிரிக்கவியலாத பண்பு ஆகும்.

இன்று தங்கள் நாட்டை இழந்துவிட்ட பாலஸ்தீனியர்கள், 1967-இல் ஜோர்டானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜோர்டான் நதியின் மேற்குக்கரை மற்றும் எகிப்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அது ஒரு தேசிய இனமாக ஏற்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினராக இல்லாவிடிலும் பார்வையாளர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது நாட்டைப் பிரகடனம் செய்யும் போது அது ஒரு இறையாண்மையுள்ள நாடு ஆகும். இந்த இறையாண்மை பாலஸ்தீன தேசிய இனத்திடமிருந்து வருகிறது.

முதல் உலகப் போருக்கு முன் ஆஸ்திரியா – ஹங்கேரி இறையாண்மையுள்ள ஒரே நாடு. 1919 இல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் தனித்தனி நாடுகளாயின. இறையாண்மை அந்தந்த தேசிய இனத்திற்கு உரிமையானது.

முன்னூறு ஆண்டுகள் ஆஸ்திரியப் பேரரசுக்குள் அடங்கியிருந்த செக்கோஸ்லேவியா 1918 இல் இறையாண்மையுள்ள நாடானது. அது 1993 இல் மிக அமைதியாக, செக் குடியரசும் ஸ்லோவேகிய குடியரசுமாகப் பிரிந்து தனி இறையாண்மையுள்ள நாடுகளாக விளங்குகின்றன.

இப்படித்தான், யூகோஸ்லாவியா ஒரு இறையாண்மையுள்ள பல்தேசிய இன நாடாக (1946) விளங்கியது. இதிலிருந்து, 20 லட்சம் மக்கள் தொகையுடைய ஸ்லோவேனியா 1991 இலும், 20 லட்சம் மக்கள் தொகையுடைய மாசிடோனியா 1993 இலும் 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரோயா, 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட போஸ்னியா, 104 லட்சம் மக்கள் தொகை கொண்ட செர்பியா ஆகியவை 1994 இலும் வெளியேறித் தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக மாறின.

மேலும் 2007 இல் செர்பியாவிலிருந்து 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாண்டிநிக்ரோவும், 2008 இல் 20 லட்சம் மக்கள் தொகையுடன் கொசாவாவும் பிரிந்து சென்று தனித்தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன.

1917 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப்பின், 1923 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியம் ஓர் இறையாண்மையுள்ள நாடாக விளங்கியது. தேசிய இனங்களின் இறையாண்மை அரசியல் சட்டப்படியே ஏற்பளிக்கப்பட்டிருந்தது. 1991 இல் தேசிய இனங்கள் பிரிந்து இறையாண்மையுள்ள குடியரசுகளை நிறுவிக் கொண்டன. மானுட வர்க்கத்தின் அலகுகளாக தேசிய இனங்கள் வளர்ச்சியடைவதும் தங்கள் தேசங்களை நிறுவிக் கொள்வதும், தங்கள் இனநலன் பேண ஓர்அரசை நிறுவிக் கொள்வதும், அதில் தவறும் அரசை தூக்கியெறிந்து மக்கள் நலம் நாடும் அரசை நிறுவிக் கொள்வதும் தற்கால வரலாற்றின் போக்கு ஆகும்.  தொடரும்……..

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments