இலங்கையில் விற்பதற்கு ஏதேனுமிருந்தால் அந்த பட்டியலை அனுப்புங்கள். அதன் பின்னர் அந்நாட்டுக்கு உதவுவது குறித்து ஆராயலாம்’ என்று ஐக்கிய அரபு இராச்சியம் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் எவையும் இலங்கைக்கு உதவ தயாராக இல்லை. எதிர்பாராத விதமாக இந்தியாவும் எம்மைக் கைவிட்டால் என்னவாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து டொலர் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினர். அவ்வாறெனில் ஏன் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை ? இவர்கள் கூறுவதைப் போன்று எமது விருப்பத்திற்கு டொலரைப் பெற முடியாது.
நான் ஜப்பான் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினேன். இலங்கை மீதான தமது நம்பிக்கை முற்று முழுதாக சரிவடைந்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.
ஜப்பானுடன் சிறந்த உறவில் இலங்கை இல்லை என்றும் , மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட காலம் செல்லும் என்று பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதுவே உண்மை நிலைவரமாகும். இலங்கைக்கு குறுகிய கால கடனையேனும் வழங்குவதாயின் ஒன்றில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லை எனில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஜப்பான் தூதுவர் கூறுகின்றார்.
அரசாங்கம் பெறும் கடனுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சி கையெழுத்திட்டதில்லை. எனவே கடனைப் பெறுவதற்கு சிறந்த வழி சர்வகட்சி அரசாங்கமாகும். இதனையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹம்மட் நஷீடை சந்திக்கக் கிடைத்தது.
‘அரசாங்கத்தினால் எனக்கொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள நிலைவரத்தை அவசர நிலைமையாகக் கருத்திற் கொண்டு டொலரையும் எரிபொருளையும் பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.’ என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கமைய சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானிடம் தான் தொலைபேசியில் உரையாடி இலங்கைக்கு உதவுமாறு கோரியதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பின் சல்மான் , ‘குறைந்தபட்சம் அவர்களிடம் ஸ்திரமானதொரு திட்டம் காணப்படுகிறதா?’ என்று தன்னிடம் கேள்வியெழுப்பியதாகவும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.
அதே போன்று ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேசிய போது , ‘இலங்கையில் விற்பதற்கு ஏதேனுமிருந்தால் அந்த பட்டியலை அனுப்புங்கள்.
அதன் பின்னர் ஆராயலாம்’ என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் என்னிடம் கூறினார். மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்த விடயங்களையே நான் இப்போது குறிப்பிடுகின்றேன். குறைந்தபட்சம் சவுதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எமது அரசாங்கத்தில் எவரும் இல்லை.
வேறு நாடுகளிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் ஒப்பந்தத்தை வேறொரு நாட்டு தலைவரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
சவுதி இளவரசர் இலங்கையிடமுள்ள வேலைத்திட்டம் என்ன என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்ட போது , ‘இலங்கை எனது நாடு அல்ல. நானும் ஒரு உதவியாகவே இதனை செய்கின்றேன்.’ என்று பதிலளித்துள்ளார். உலகில் எந்த நாடு எமக்கு உதவ தயாராக உள்ளது? எதிர்பாராத விதமாக இந்தியாவும் எமக்கு உதவ மறுத்தால் என்ன செய்வது? என்று கேள்வியெழுப்பினார்.