இந்த ஆண்டு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சைன்கோன்ங் தெரிவித்தார். சீனாவின் யுனான் மாநில மக்களின் அன்பளிப்பு செய்யப்பட்ட நிவாரண பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகரில் ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறது. நட்பு நாடு என்ற ரீதியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான நிவாரணப் பணிகளை நாம்தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.
கல்முனைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள எனது முதலாவது விஜயம் இதுவாகும். இங்கு மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிவாரண பணி எல்லா பிரதேசங்களுக்கும் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்.
பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களாகிய உங்களின் வயிற்றுப் பசியை நன்கு அறியமுடிகிறது எதிர்காலத்தில் முடியுமான உதவிகளை இந்த மக்களுக்கு செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எங்களை அன்பாக வரவேற்று உபசரித்த கல்முனை வாழ் மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.