இலங்கையின் சுதந்திரநாள்…ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்! – சிவசக்தி-

You are currently viewing இலங்கையின் சுதந்திரநாள்…ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்! – சிவசக்தி-

சிங்களதேசம் இன்று தனது 72 ஆவது சுதந்திரநாள் எனப் பெருமையோடு கூறிக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. இலங்கைக்கு வாழ்த்துக் கூறிநிற்கும் எவரும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மறுப்பவர்களே.

 இத்தருணத்தில் இந்தநாள் ஈழத்தமிழரான எங்களுக்கு எத்தகைய நாளாக அமைகிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் பிடியிலிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் ,  1948 பெப்ரவரி நான்காம் நாள் சிங்கள ஆட்சியாளரிடம் கைமாறியது.

இந்தநாள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஆழமான வடுவைப் பதித்த நாளாக வடிவெடுத்தது. ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் எம்மினத்தை நசுக்குவதற்கு திட்டமிட இந்நாளே வழிவகுத்தது. தமிழர்களைத் தனித்துவமான இனமாக வாழவிடக்கூடாது என்கின்ற எண்ணக்கரு இந்நாளிலேதான் சிங்களப்பேரினவாதத்தின் மூளையில் கருக்கூட்டியது.

வரலாற்றுத்தொன்மையுடன், வாழ்வியல் விழுமியங்களையும் தனித்துவமான மொழியையும் கொண்டிருந்த தமிழினம் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நின்றது.  அதுவரை அரசநிரவாகப் பொறுப்புகளிலும் பொருளாதாரதுறையிலும், கல்வியிலும்  தன்நிகரற்றுத் திகழ்ந்த தமிழரைத் தாழ்த்தி, அடக்கி அடிமைகளாக்கும் பெருஞ் சூழ்ச்சியில் சிங்களப் பேரின ஆட்சியாளர்கள் போட்டிபோடத் தொடங்கினார்கள்.

தமது நிர்வாக இலகுவாக்கத்திற்காக பிரித்தானியர்கள் கைக்கொண்ட பிரித்தாளும் திட்டத்தையே பின்னரான சிங்கள ஆட்சியாளர்களும் பின்பற்றினர். தமிழ்மக்களிடையே பல்வேறு பாகுபாடுகளை உருவாக்கி, தாங்கள் சுயலாபமீட்டத் தொடங்கினர்.

அதேவேளையில் பௌத்தமத சிந்தனையாளர்கள் பௌத்த தேசியவாதத்தை முன்வைத்து, சிங்களமக்களை உருவேற்றினார்கள். இலங்கைத்தீவில் தமிழர்களை மேலோங்க அனுமதித்தால், அது இலங்கையில் சிங்கள இனத்திற்கு ஊறுவிளைவிக்கும் எனக்கூறி தமிழ்மக்கள்மீதான காழ்ப்புணர்வை அவர்கள் விதைத்தார்கள்.

இவ்வாறு பௌத்தமத சிந்தனையாளர்களால் விதைக்கப்பட்ட இந்தநச்சு விதைகள் பெருவிருட்சமாகி, ஈழத்தமிழர்களை சமுக, அரசியல் மற்றும் பொருளாதார வழிகளில் நசுக்கத்தொடங்கின.

தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எனச் சொல்லப்பட்ட சோல்பரிச் சட்டத்தின் 29 ஆவது பிரிவு தமிழர்களை எள்ளிநகையாடியது.

சிங்கள ஆட்சியாளர்கள் 1948 முதல் ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் நாளை சிங்கக்கொடியேற்றி கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 1948 இல் ஏற்றப்பட்ட சிங்கக்கொடியானது, கண்டி அரசின் கடைசிமன்னன் கண்ணுச்சாமியின் ஆட்சிக்காலத்துக்கானது என்றும், தமிழ்மக்களின் இன இறைமாட்சிமை தாங்கிய கொடியாக நந்திக்கொடி இருந்தது என்றும் வரலாறு சொல்லிநிற்கின்றது. பின்னர் எமது தேசவிடுதலைப்போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது, உருவாக்கப்பட்ட பாயும் புலியின் உருவம் தாங்கிய புலிக்கொடி தமிழீழ தேசத்தின் தேசியக்கொடியாகியது.

1948 இல் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டபின்னர் தான் இலங்கை குடியுரிமைச்சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றி, மலையகத்தில் தமிழர்களை நிர்க்கதியாக்கினார் இலங்கையின் முதற்பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா. உலகமுற்றத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரவைத்த இத் தமிழர்கள் நாடற்றவர்களாகிய துயரம் நிகழ்ந்தது.

மலையகத்தில் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து, தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைத்து, இலங்கைமுழுவதிலும் பேரினவாதத்தின் அதிகாரத்தை நிலைநாட்ட இச்சட்டம் உதவியது.

இவ்வாறாக தமிழினத்தவர்கள் மீது சிறிது சிறிதாக தொடுக்கப்பட்ட அதிகார அடக்குமுறையே இரு இனங்களுக்கும் இடையிலான  பெரும் முரண்களை உற்பவித்தது. இலங்கை சுதந்திரமடைந்ததாக சொல்லப்படும் காலத்திலிருந்து தமிழர்களின் பாரம்பரிய தாயகப்பகுதிகள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இதன்வழி சிங்களப் பேரினத்து மாணவர்களைக் காட்டிலும் , தமிழ்மாணவர்கள் பல்கலைக்கழக மேற்படிப்பிற்காக அதிகளவு புள்ளிகளைப் பெறவேண்டிய தரப்படுத்தல் முறை உருவானது. இந்த தரப்படுத்தற் கல்விக்கொள்கைக்கு எதிராக கிளர்ந்த மாணவர்களின் போராட்டமே காலநீட்சியில் தாயக விடுதலைப்போராட்டமாக பரிணாமமுற்றது.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உன்னத எண்ணத்தில் உருவான போராட்டத்தில், தேசியத்தலைவரின் பக்கபலமாக தமிழ்மக்கள் அணிதிரண்டனர். போராளிகளின் ஒப்பற்ற தியாகங்களூடாகவும் மக்ககளின் பெரும் பங்களிப்புடனும் தொடர்ந்த இனவிடுதலைப்போராட்டத்தை, தனது எதேச்சதிகாரத்தால்  உலகத்திற்கு பயங்கரவாத நடவடிக்கைகளாகச் சித்தரித்தது பேரினவாதம்.

தமிழ்மக்களின் இறைமைகளை மீட்டெடுக்க உருவான விடுதலைப் போராட்டத்தை படைபலத்தோடும், உலக நாடுகள் சிலவற்றின் ஆசிகளோடும் நசுக்கமுனைந்தது பேரினவாத ஆட்சிபீடம். ஆனால் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல எமது தாயக மீட்புப்போரின் வடிவம் இன்று மாற்றங்கொண்டு தொடர்கிறது.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, தமிழ்மக்களை இலங்கைத்தீவில் இருந்து முற்றாகத் துடைத்தழிக்கும் சிங்களப் பேரினவாதம் இன்று தனது சுதந்திரநாள் என முழக்கமிடுகிறது.

காலத்துக்கு காலம் தமிழ்மக்கள்மீது தனது படைகளை ஏவி, இனஅழிப்பு

செய்துவந்த பேரினவாதம், மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை

பல இலட்சம் மக்களை கொன்றழித்துள்ளது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். போரின் வடுக்களை உள்ளத்திலும் உடலிலும் தாங்கி அல்லலுறும் தமிழ்மக்களுக்கான தீர்வுகள் இன்னமும் இல்லை.

ஆயினும், எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களையும் அழித்தொழிக்க பேரினவாதம் உறுதியெடுத்து நிற்கிறது. தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதிகள் தொடர்ந்து விழுங்கப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்படுகின்றன. தமிழர்களின் தொன்மம் திட்டமிடப்பட்டு இல்லாமலாக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில்,  தொடர்ந்து  பேரினவாத ஆட்சியாளர்கள் கொண்டாடி மகிழ்ந்து, வாளேந்திய சிங்கக்கொடியேற்றி  இறும்பூதெய்தும் சுதந்திரநாள் என்பது ஈழத்தமிழினத்தவர்களுக்கு கரிநாளே ஆகும்.

இந்தநாள் ஈழத்தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கும் நாள். இந்நாளைப் பெருமெடுப்பில் கொண்டாடுவதன் மூலம் தமது ஆட்சி சிறப்பானதென நிறுவ முயல்கிறது பேரினவாத அரசு. பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழியும் எம்மினம், என்றும் தனித்துவத்துடன் தன்னாட்சி உரிமையுடன் வாழவே விரும்புகிறது என்பதை உணர்த்தவேண்டியவர்களாக ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உள்ளோம். இது எமது வரலாற்றுக் கடமையாக எம்முன் உள்ளது என்பதை நினைவிற்கொள்வோம்.

  • சிவசக்தி-
பகிர்ந்துகொள்ள