சிறீலங்காவின் சுதந்திரதினம் தமிழ்த் தேசத்திற்கு கரிநாளாகும்! -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

You are currently viewing சிறீலங்காவின் சுதந்திரதினம் தமிழ்த் தேசத்திற்கு கரிநாளாகும்! -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

சிறீலங்கா அரசானது தனது 72வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது.

பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட சிறீலங்கா அரசானது கடந்த 72வருடங்களாக இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களை உயிருடன் அழித்தல் அல்லது தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான மொழி, கலாசாரம், பொருளாதாரம், கல்வி, நில ஆதிக்கம் போன்றவற்றின் மீதான கட்டமைப்பு சார் இனவழிப்பை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டு வருகின்றது.

அக் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றும் வகையிலேயே அரச கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரச கட்டமைப்பு ஊடாகவே தமிழ்த் தேசத்தின் மீது இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த இனவழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளே மிகப்பெருமளவில் பங்காற்றியுள்ளன.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே கண்மூடித்தனமாகவும், யுத்த விதிகளை மீறியும், இரசாயன கொத்துக் குண்டுகளை வீசியும், உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிப்புக்களையும், சிறீலங்கா ஆயுதப்படைகள் மேற்கொண்டிருந்தன. இதன் மூலமாகவே தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.

இனவழிப்புச் செய்த சிறீலங்கா இராணுவம் எந்தவொரு கட்சிக்கும் சொந்தமானதல்ல. மாறாக அனைத்து சிங்கள கட்சிகளினதும் ஆதரவு பெற்றேயிருந்தது.

எந்ததவொரு பேரினவாதக் கட்சி ஆட்சி அமைத்தாலும், மாறி மாறிவரும் ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த மனநிலையில் இருந்து கொண்டே தமிழரை அழிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்திருந்தனர். அத்துடன், சகல சிங்களக் கட்சிகளும் சிறீலங்கா இராணுவத்தை பாதுகாக்கவே முனைந்து நின்றன.

இத்தகைய சிங்கள பௌத்த மனநிலை கொண்ட சிங்கள பேரினாவாத அரசினால் கொண்டாடப்படும் தினமாகவே பெப்ரவரி 04ம் திகதிய சுதந்திரதினம் அமைந்துள்ளது.

தமிழினத்தை அழித்து, அடிமைப்படுத்தி, இலங்கையை தனி சிங்கள பௌத்த தேசமாகக் கருதி, சிங்கள பௌத்தம் கொண்டாடும் சுந்திரதிரநாளை அதற்கு எதிர்மாறாகவே பாதிக்கப்பட்ட தமிழத் தேசம் கடந்த 72 ஆண்டுகளாக கறுப்பு நாளாக கடைப்பிடித்து வருகின்றது.

எமது தேசத்தின் மீதான அடக்குமுறை நீங்கி, தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் வரை தமிழினம் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் சுநத்திரநாளை புறக்கணித்து, கரிநாளாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றோம்.

இந்த அடிப்படையின் தொடர்ச்சியாக, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி, இக் கறுப்பு நாளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியது அனைத்துத் தமிழ் மக்களதும் தார்மீகக் கடமையாகும்.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் 04.02.2020 (செவ்வாய்க்கிழமை) அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலிலும்,

மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியில் ஆரம்பமாகி நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எமது பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து பொது மக்களையும் மேற்படி பேராட்டத்தில் கலந்து கொண்டு பூரண ஆதரவு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

பகிர்ந்துகொள்ள