வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியானது, யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி நாச்சியமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுவலகம், தமிழாராட்சி மண்டபம், மணிக்கூட்டு கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.
செம்மணியில் இருந்து வாகனங்களில் பயணிக்கும் பேரணியானது நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து முதலாம் நாளினை இரணைமடுவில் நிறைவு செய்து கொள்ளும்.
இரண்டாம் நாள் பேரணி பெப்ரவரி 5ஆம் நாளை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு முற்பகல் 10.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி புறப்படும்.
செல்லும் வழியில் புளியம்பம் பொக்கணை, தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை சென்றடையும். அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சென்று உறுதி எடுத்துக்கொண்டு முல்லைத்தீவை சென்றடைந்து அங்கு பேரணியின் இரண்டாம் நாள் நிறைவு பெறும்.
மூன்றாம் நாள் பெப்ரவரி 6ஆம் தேதி காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை மாவட்டத்தின் தென்ன மரவாடியின் ஊடாக திருகோணமலையை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடையும். பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வினை நிறைவு செய்யும்.
நான்காம் நாள் பேரணி பெப்ரவரி 7ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு நகரை வந்தடையும். அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் சுதந்திரதினமான பெப்ரவரி 4ம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த பேரணி இடம்பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.