இலங்கையில் தயாரிக்கப்படும் காட்போர்ட் சவப்பெட்டிகளை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக இத்திட்டத்தை செயற்படுத்திவரும் கல்கிசை நகர சபையின் உறுப்பினரான பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 1,000 கார்ட்போர்ட் சவப்பெட்டிகளை வழங்குமாறு வியட்நாமில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
வழக்கமான மர சவப்பெட்டிகளை வாங்க முடியாத மக்களுக்கு உதவும் வகையில் காட்போர்ட் சவப்பெட்டி தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கமான மரத்தாலான சவப்பெட்டி ஒன்றின் விலை குறைந்தது 30,000 முதல் 40,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் காட்போர்ட் சவப்பெட்டி ஒன்றின் விலை 5,000 ரூபாவாகும். உறுதியாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சவப்பெட்டி 100 கிலோ எடை வரை தாங்கக்கூடியது. இந்தப் பெட்டி தேவைப்படுவோர் தன்னை 0777315605 இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பிரியந்த சஹபந்து அறிவித்துள்ளார்.
இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தயாரிப்பு. மிக முக்கியமாக மரங்களை வெட்டுவதை இந்தத் திட்டத்தால் குறைக்க முடியும் என்பதால் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.