இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இந்தோனேசியா காவற்துறையினர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சுபசிங்க கடைசியாக கடந்த செவ்வாய்க் கிழமை (02) கொழும்பில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தொடர்பு இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சுபசிங்கவை விசாரிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் பலமுறை முயன்றும் அறையின் கதவு திறக்கப்படாததால், நிர்வாகத்தினர் கதவை உடைத்து அறைக்குள் நுழைந்து சோதனையிட்ட போது சுபாசிங்கின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, அவரது 4 வயது மகள் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத பிரேசிலியப் பெண் ஆகியோருடன் ஜகார்த்தாவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.