இலங்கை – இந்தியா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்!

You are currently viewing இலங்கை – இந்தியா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்!

இந்திய இலங்கை கடற்படையினர் இடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சியான சிலிநெக்ஸ் பயிற்சியின் இரண்டாம் கட்ட கடல்சார் பயிற்சிகள், இன்று முதல் 08ஆம் திகதி சனிக்கிழமை வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் நடைபெறுகின்றன.

இருநாட்டினதும் கடற்படையினரின் இயங்குதிறன் மேம்பாடு, பரஸ்பர புரிந்துணர்வினை மேம்படுத்துதல், கடல் மார்க்கமான பன்முக செயற்பாடுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் சிறந்த செயல்முறைகளை பரிமாறுதல் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு சிலிநெக்ஸ் 2023 பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

ஏப்ரல் 03 ஆம் திகதி ஆரம்பமான சிலிநெக்ஸ் பயிற்சியின் துறைமுக மட்டத்திலான பயிற்சிகள் 05ஆம் திகதி வரை கொழும்பிலும் 06ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்தியக் கடற்படையானது ஐஎன்எஸ் கில்தான் ( அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்படைக் கப்பல்) மற்றும்ஐஎன்எஸ் சாவித்ரி (ரோந்துக் கப்பல்) ஆகிய கடற்படை கப்பல்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

அதேநேரம் இலங்கை கடற்படையானது எஸ்எல்என்எஸ் கஜபாகு ( அதிநவீன ரோந்துக் கப்பல்) மற்றும் எஸ்எல்என்எஸ் சாகரா (OPV) ஆகியவற்றால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இந்திய கடற்படையின் செத்தக் ஹெலிகொப்டர் மற்றும் கடல் ரோந்து பணிகளுக்கான டோனியர் விமானமும் இலங்கை கடற்படையின் டோனியர் விமானம் மற்றும் பெல் 412 ரக ஹெலிகாப்டர் ஆகியவையும் இப்ப பயிற்சியில் கலந்துகொள்கின்றன.

இரு கடற்படையினரதும் விசேட படைகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதான சிலிநெக்ஸ் பயிற்சி 2022 ஆம் ஆண்டு மார்ச் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் விசாகபட்டினத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறைமுக மட்டத்தில் நடைபெறும் பயிற்சிகளில் விளையாட்டுகள், யோகா பயிற்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இதன் மூலமாக தோழமை மற்றும் நட்புறவின் பிணைப்பினை கட்டி எழுப்புவதற்கும் பரஸ்பரம் துறைசார்ந்த விடயங்களை கற்றுக்கொள்வதற்கும், அதேபோல பொதுவான பெறுமானங்களை பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

கடல் மார்க்கமாக மிகவும் வலுவான பரஸ்பர ஒத்துழைப்பினை கொண்டிருக்கும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆழமான ஈடுபாட்டினை பயிற்சிகள் மேலும் விஸ்தரிப்பதாக அமைகின்றன.

மேலும் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் கௌரவ பிரதமர் அவர்களது பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய இலங்கை கடற்படை இடையிலான தொடர்புகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments