இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்!

You are currently viewing இலங்கை உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது அவசியம் – பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட்!

போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும், இதுகுறித்து தமது அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளியொன்றின் ஊடாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் உள்ளடங்கலாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சிவில் யுத்தம் முடிவிற்குவந்து இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) 13 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியையும் பொறப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்துவதில் நானும் பிரிட்டன் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற ஸ்திரமான நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றேன்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்மீது, குறிப்பாக அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினர்மீது நாம் கரிசனைகொண்டிருக்கின்றோம். இவ்விடயத்தில் எமது 46ஃ1 தீர்மானம் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது குறித்த பிரிட்டனின் நிலைப்பாட்டையும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன். இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அதேவேளை, போரின்போது இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னேற்றகரமானதும் செயற்திறனானதுமான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்துவோம்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துவரும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதையும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் பிரிட்டன் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியிலான செயற்திறன்வாய்ந்த தீர்வுகள் குறித்து ஒன்றிணைந்து ஆராயுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் வலியுறுத்துகின்றோம். அதேவேளை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதில் விசேட அவதானம் செலுத்தியிருப்பதுடன், இலங்கை மக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும், அதனை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply