இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்கள் சர்வதேசதாரதங்களை பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 அமர்வு இன்று ஆரம்பமானவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை கருத்தில் எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களை கவனத்தில் எடுத்துள்ள அதேவேளை கருத்து சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் இலங்கையின் அனைவரினதும் பொருளாதார சமூக கலாச்சார சுதந்திர உரிமைகள் ஆகியவற்றை உட்பட மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மைக்கு வழிவகுத்ததை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பலவந்தமாக காணாமல்செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.
அமைதியான ஒன்றுகூடுதலிற்கான உரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அது சர்வதேச சட்டங்கள் தராதரங்களை முழுமையாக பின்பற்றும்வரை இடைநிறுத்தி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியுள்ளது.