இலங்கை அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project,” a UN ECOSOC accredited member organization ) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், நாட்டிற்குள் நுழையும் போர்க்குற்றவாளிகளை கனடா தடைசெய்ய முடியும் என்றும், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் மற்றும் 2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்ட விதிகளின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான பயணத்தடை, சொத்து முடக்கம், நிதி மற்றும் வணிக தடை போன்றவற்றை விதிப்பது தொடர்பாக நாம் கனேடிய அரசுடன் இணைந்து பணியாற்ற அணியமாக உள்ளோம் என இவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழர்கள் போர் சூழல் காரணமாக உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டாலும், தமது தாய்நாட்டுக்கு அடுத்தபடியாக, கனடாவில் தான் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அது மட்டுமன்றி, பலவழிகளில் இந்நாட்டு வளர்ச்சியில் தமது பங்களிப்பையும் செலுத்தி வருகின்றனர்.
மனித உரிமைகள் தொடர்பில் கனடா, உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் மிகவும் அக்கறை செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது. எனவே கனடா இந்த போர் குற்றவாளிகளுக்கு எதிராக அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து சர்வதேசத்துக்கு முன் மாதிரியாக திகழ்வதோடு, சிறிலங்காவினது போர் குற்றவாளிகளை ரோமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம் 2020.12.07
போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும்
ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது. இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின் பதுக்கலை தடுக்கவும் உதவும். சிறிலங்காவில் மக்கள் தொகைக்கு எதிராக பெரும் அட்டூழியங்களை 2009 போர் முடிவின் முன்னும் அதன் பின்னும் புரிந்த பின்வரும் நபர்களுக்கும் இதே நடைமுறைக்கு உட்டுத்தப்பட வேண்டியவர்கள் என நம்புகிறோம். கீழுள்ள இந்தப்பட்டியலில் உள்ளவர்கள் ஐநா மனிதவுரிமைகள் சபை ஆணையாளரின் சிறிலங்கா மீதான அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மனிதவுரிமைகள் சபையின் உயர் தூதுவர் ஸெயிட் (Zaid)அவர்களின் பரிந்துரையின் படி பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் அவர்களது சர்வதேச சுதந்திர விசாரணைக்கான முன்முயற்சியை பின் தொடர்ந்து இன்றைய கனேடிய அரசு தடைகளை இவர்கள் மேல் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்துவது உகந்தது.
இவர்கள்:
1. Lieutenant General Shavendra Silva
2. Major General Sathyapriya Liyanage
3. Major General Kamal Gunaratne
4. Major General Mahinda Hathurusinghe
5. Major General Nanda Mallawarchcha
6. Colonel G.V. Ravipriya
7. Brigadier Prasanna Silva
8. Major General Jagath Dias
9. Gotabaya Rajapaksa
10. Mahinda Rajapaksa
11. Admiral Wasantha Kumar Jayadewa Karannagoda
12. Admiral Thisara S. G. Samarasinghe
13. Admiral Dissanayake Wijesinghe Arachchilage Somatilake Dissanayake
14. Major General Jagath Jayasuriya
15. Brigadier Nandana Udawatta
16. Brigadier Chagie Gallage
17. C.N.Wakishta
18. General Sarath Fonseka
மேலுள்ள பட்டியலில் லெப். ஜெனரல். சரவேந்திர சில்வா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது 2009 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 70,000 மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த மனிதவுரிமை மீறல் குற்றத்தின் அடிப்படையில் 02/14/2020 அன்று அமெரிக்க அரசு தடைகளை ஏற்கனவே விதித்துள்ளது.
மேலுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் இன்றைய சிறிலங்காவின் அரச அதிபரும் அன்றைய போரின் போது பாதுகாப்புச்செயலருமாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைகளின் கீழ் பணிபுரிந்தவர்கள். அன்றைய அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று தலைமை அமைச்சராக இருக்கிறார். மேல் குறிப்பிட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைய அரசில் உயர் அதிகார பதவிகளில் உள்ளனர். பின்னோக்கி பார்க்கும் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகளின் படி இன்றைய சிறிலங்கா அரசில் பதவி வகிக்கும் அனைவரும் தமிழரின் குருதியில் தோய்ந்த கைகளின் சொந்தக்காரர்கள் என்பது தெளிவாக புலப்படுகிறது. சிறிலங்கா அனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்கியது மட்டுமல்லாது ஐநா மனிதவுரிமை மன்றின் 30/1 தீர்மானத்தின் கடப்பாடுகளையும் புறம் தள்ளியுள்ளது. இந்த அனைத்துலக ஒப்பந்தங்களையும் மனிதவுரிமைகளையும் மதிக்காத போக்கின் காரணமாக கனடா சிறிலங்கா அரசின் மீது தடைகளை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.
இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான பயணத்தடை, சொத்து முடக்கம், நிதி மற்றும் வணிக தடை போன்றவற்றை விதிப்பது தொடர்பாக நாம் கனேடிய அரசுடன் இணைந்து பணியாற்ற அணியமாக உள்ளோம்.
2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்ட விதிகளின் அடிப்படையில் கனடாவில் இவர்கள் மீது இந்த தடைகளை விதிக்க முடியும். இந்த சட்டவாக்கத்தின் படி “…. வெளிநாடுகளில் அனைத்துலக விதிமுறைகளின் படி மனிதவுரிமைகளை மீறிய பொறுப்புக்கூறும் தகமையுடைய அதிகாரிகள் மேல் அவர்களின் நாடுகள் தகுந்த கட்டுப்பாடுகளற்ற நீதியான விசாரணை நடாத்த முடியாத போதும் நடாத்த முயலாத போதும் இந்த தடை பொருத்தமானது” என்று கூறுகின்றது.
மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்தின் படி கனடாவினது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டவாக்கத்தின் பிரிவு 35(1)(a) அல்லது (b) மூலம் இவர்கள் கனடாவுக்குள் நுழைவது மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டவாக்கப்பிரிவு ” ஓர் அரச சேவைகளின் உயர் அதிகாரி சட்ட துணைப்பிரிவு 6(3)-(5) இன் படி பயங்கரவாதத்தில் அல்லது திட்டமிடப்பட்ட பெரும் மனிதவுரிமை மீறல்களிலோ இனப்படுகொலையில் ஈடுபட்டவராகவோ அல்லது ஈடுபடுபவராகவோ அமைச்சர் கருதும் பொருட்டு” இவர்கள் கனடாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.
மேலும் சிறிலங்காவினது போர் குற்றவாளிகளை ரோமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கனேடிய அரசு தலையிட்டு கடந்த பதினொரு ஆண்டுகளாக தமது உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறோம். கனடா மனிதவுரிமைகளை மதிக்கும், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் சிறிலங்காவின் போர்குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கும் படியும் கனேடிய குடிமக்களாக கனேடிய அரசை கேட்டுக்கொள்கிறோம். கனேடிய அரசு தலையிட்டு மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மீறல்களை நிறுத்தி உலகத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது மிகவும் பாராட்டப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.