இலங்கை நிர்வாகத்தில் இந்தியா..!

You are currently viewing இலங்கை நிர்வாகத்தில் இந்தியா..!

சிறிலங்காவின் அரச சேவையில் பயனுள்ள மாற்றங்களையும் கண்காணிப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள உதவுவது என்ற அடிப்படையில், இந்தியாவின் நகர்வுகள் இலங்கையில் இடம் பெறுகின்றன.

ஏற்கனவே சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் மில்லியன்களையும் பில்லியன்களையும் அள்ளிக்கொடுத்த இந்தியா, இப்போது சிறிலங்காவின் அரச சேவையை வினைத்திறனாக்குவது மற்றும் அதனை கண்காணிப்பது என்பதன் அடிப்படையில் ஒரு அதிகாரியை டெல்லியில் இருந்து கொழும்புக்கு கடந்த வார இறுதியில் அனுப்பி இருந்தது.

இதன் அடிப்படையில் கொழும்பில் குதித்த இந்திய நல்லாட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால் கடந்த வார இறுதியில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின் போது தான், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தை இலங்கை உள்வாங்கி அரச சேவையில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை டெல்லியால் கூறப்பட்டது.

அதாவது இலங்கையில் நடைமுறையில் உள்ள மக்கள் சேவைகளுக்கு இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தற்போதைய பூகோள அரசியல் போட்டியில் தகவல் தொழில்நுட்பங்கள் ஊடான வெளியார் தலையீடுகள் இல்லையென்றால் உளவு பார்க்கும் நகர்வுகள் பிரசித்தமாக இடம்பெறுவது தெரிந்த விடயம்.

அண்மையில் பல மேற்குலக நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள டிக் டொக் செயலியை அரச பணியகங்கள் மற்றும் முக்கியமான கேந்திர பணியகங்களில் பணியாளர்கள் பயன்படுத்த தடை விதித்திருந்தன.

இதே போல, கடந்த பெப்ரவரியில் இலங்கைக்குச் சென்ற அமெரிக்காவின் மெகா தூதுக் குழு ஒன்று (சீ.ஐ.ஏ மற்றும் எஃப்.பீ.ஐ அதிகாரிகள் குழு) இலங்கையில் பேச்சுக்களை நடத்திய போது பயோமெட்ரிக் எனப்படும் உயிரி அளவியல் அடையாள முறைமையை உருவாக்கி வழங்கும் வோஷிங்டனின் விருப்பத்தை பகிரங்கப்படுத்தியது.

உலகில் உயிரி அளவியல் முறையை பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்கா உள்நாட்டில் மட்டுமல்ல, தான் இலக்கு வைக்கும் சில நாடுகளிலும் இந்த பயோமெட்ரிக் முறையை உருவாக்க ஆதரவளித்து வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் எஃப். பீ. ஐ முகமை புதிய உயிரியல் அளவு தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதற்காக தற்போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவிட்டு வருகின்றது.

எஃப். பீ. ஐ உருவாக்கும் இந்தப் புதிய தரவுத் தளத்தில் டிஎன்ஏ எனப்படும் மரபணு தரவுகள், கைரேகைகள் உட்பட ஏனைய உயரி அளவியல் தரவுகள் சேமித்து வைக்கப்படும் வகையில் பாரிய களஞ்சியம் ஒன்று உருவாக்கப்படுகின்றது.

ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவிற்கு நிலத்திற்கு கீழே நிர்மாணிக்கப்படும் இந்த பாரிய தரவுக் களஞ்சியத்தில் பல்லாயிரக்கணக்கான கணினிகளில் இவ்வாறன தரவுகள் சேகரிக்கப்படும் வகையில் திட்டங்கள் இருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் தான் இலங்கையிலும் பயோமெட்ரிக் தரவுத் தளத்தை உருவாக்கி வழங்கிக் கொள்ள வோஷிங்டன் விரும்பும் நிலையில், இந்தியாவும் இந்த விடயத்தில் குதிப்பது தெரிகின்றது.

இந்தியாவில் ஏற்கனவே ஆதார் என்ற வகையில் பயோமெட்ரிக் தகவல் தரவுக் களஞ்சியங்கள் சேகரிக்கப்பட்டு பொதுமக்களின் தரவுகள் யாவும் மத்திய அரசிடம் உள்ள நிலையில், சிறிலங்காவின் அரச சேவையில் இந்திய தகவல் தொழில்நுட்பத்தை புகுத்திக் கொள்ள இந்தியா பிரயத்தனப்படும் நிலையில் தான்,

இந்தியாவின் இந்த வியூகத்தை ஊடறுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க சூசகமாக ஒரு பதிலைக் கூறியுள்ளார்.

அந்த வகையில் அரச நிர்வாகம் மற்றும் அரச கொள்கைகளை வினைத்திறன் ஆகும் வகையில் அதிகாரிகளை உருவாக்கிக் கொள்வதற்காக ஒரு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி தாருங்கள். அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இலங்கையர்கள் இந்த விடயத்தை கண்காணித்துக் கொள்வார்கள் எனக் கூறியிருக்கிறார்.

மாறாக இந்தியாவின் தொழில்நுட்பத்தை சிறிலங்காவின் அரச நிர்வாகத்திற்குள் புகுத்திக் கொள்ள ரணில் பின்னடிப்பது தெரிகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply