இளையோருக்கான உலகக் கோப்பை : வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை!

  • Post author:
You are currently viewing இளையோருக்கான உலகக் கோப்பை : வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை!

இளையோருக்கான உலகக் கோப்பை போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது இளையோருக்கான உலக கோப்பை துடுப்பாட்ட போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த துடுப்பாட்ட திருவிழாவில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்துடன் மோதியது. நாணய சுழட்சியில் ஜெயித்த வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி வங்காளதேச பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் அந்த அணி 8 இலக்குகளுக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது. வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் 3 இலக்குகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷமிம் ஹூசைன், ஹசன் முராத் தலா 2 இலக்குகளும் கைப்பற்றினர்.

அடுத்து 212 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்ஜித் ஹசன் (3 ஓட்டங்கள்), பர்வேஸ் ஹூசன் (14 ஓட்டங்கள்) ஏமாற்றம் அளித்த போதிலும், நடுத்தர வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். மமுதுல் ஹசன் ஜாய் சதம் (100 ஓட்டங்கள், 13 நான்குகள்) அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் வங்காளதேச வீரரின் முதல் சதம் இதுவாகும். அவருக்கு தவ்ஹித் ஹிரிடாய் (40 ஓட்டங்கள்), ஷஹதத் ஹூசைன் (40 ஓட்டங்கள், ஆட்டமிழக்காமல்) பக்கபலமாக இருந்தனர்.

வங்காளதேச அணி 44.1 பந்து பரிமாற்றங்களில் 4 இலக்குகளுக்கு 215 ஓட்டங்கள் சேர்த்து 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இளையோருக்கான உலக கோப்பை மட்டுமல்ல, எந்த ஒரு வடிவிலான உலக கோப்பை போட்டியிலும் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனையை வங்காளதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதே மைதானத்தில் 9-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு வெற்றியாளரான இந்தியாவை எதிர்கொள்கிறது.

இளையோருக்கான உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் மகுடத்துக்கு போட்டியிடுவது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2000-ம் ஆண்டிலும் (இந்தியா-இலங்கை), 2006-ம் ஆண்டிலும் (இந்தியா-பாகிஸ்தான்) இவ்வாறு நடந்துள்ளது.

வங்காளதேச அணித்தலைவர் அக்பர் அலி கூறுகையில், ‘இது எங்களது முதலாவது இறுதிப்போட்டி. ஆனால் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது. இந்தியா மிகச்சிறந்த அணி. அவர்களை வீழ்த்த எங்களது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.’ என்றார்.

முன்னதாக நாளை நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில், அரைஇறுதியில் தோற்ற அணிகளான பாகிஸ்தானும், நியூசிலாந்தும் மோத உள்ளன.

பகிர்ந்துகொள்ள