இவளைப் பார்க்க சிலருக்கு ஆபாசம் தெரிகிறதாம்…..

You are currently viewing இவளைப் பார்க்க சிலருக்கு ஆபாசம் தெரிகிறதாம்…..

இவளைப் பார்க்க சிலருக்கு ஆபாசம் தெரிகிறதாம்…..

இப்படிச் சொல்லியே
இசைப் பிரியாக்களின்
சடலங்களின் நீதி கேட்ட புகைப்படங்களையும் சத்தமின்றி
எதிரிக்குச் சாமரை வீசி
ஓடி ஓடி ஒளித்தார்கள்..

எம்மினம் எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றது எனும் வேதனையை
செத்தபின்னும் எம்மவரைச்
சொல்ல விடாமல்
புதைத்து அடக்கினார்கள்!

காமவேட்டையாடியவர்களின்
உண்மை முகத்தை
ஓடி வந்து மறைக்கும்
பச்சோந்திகளின் பசப்பு வார்த்தைகளே
எமக்கான நீதியைப் பேச விடாமல் நடுவீதியில் அம்மணமாக்குகின்றன!

கிருசாந்திகளின்
கண்ணீரின் வலிகளைப்
பாட்டெடுத்துப் பாடாதவரெல்லாம்
அத்தனை பெண்களதும்
குறியீட்டுச் சிலை இவளுக்குக்
கண்டனக் கவி பாடுகின்றனர்!

இழந்தவர்களுக்கும்
இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்பவர்களுக்கும்
இன்னமும் மீளா வலி
மிச்சமாக உச்சமாக
எச்சமாகவே இருக்கிறது!
உரத்துச் சொல்ல!

முள்ளிவாய்க்காலில்
மலசலம் கழிக்க இடமின்றி
அருகருகே வரிசையில் கழித்தோமே?

எவரும் ஆபாசமாக
பிறப்புறுப்புகளையா
பார்த்தார்கள்?

கண்ணியத்தைத் தின்னும் காமம்
அன்று எவர் கண்ணிலும் இருக்கவில்லையே?

கயவர்கள் வீசிய குண்டுமழையில்
உடுத்திருந்த புடவை கந்தலாக்கப்பட்டபோது
எம்மவர் யாருக்கும் காமம் வரவில்லையே?

இறந்த தாயின்
திறந்த முலையில்
பிறந்த குழந்தை
களத்தில்
பால் குடித்தபோது
கண்ணீரல்லவா கடலானது!

சிங்கள பேரினவாதிகளால்
எம் சகோதரிகளைக் கிழித்து நிர்வாணமாக்கப்பட்டு
கதறக் கதற வன்புணர்வு செய்து
பிய்த்த உடல்களைக்
கொத்து கொத்தாக
ஆடையின்றிப் வரிசையில்
பார்த்த உங்களிற்கு
காமமாடா வந்தது?

உண்மையைச் சொல்லுங்கள்!
நீங்கள் யார்?

தமிழ்த் தாய் வயிற்றில்
பிறந்த உண்மைத் தமிழனுக்கு
சிறுமியின் இச் சிலையில்
வலிகள் மட்டுமே தெரியும்!

எங்களுக்கு வலியே எழுகிறது!
பார்க்கப் பார்க்க கோபம் அல்லவா கொதித்துக் கொந்தளித்து வருகிறது!

சிங்கள இன வெறியர்கள் மீதும்
எம்மினத்தை அழிக்கக் கங்கணம் கட்டிய கயவர்கள் மீதும் தீயாக எழுவது போபமே!

உங்களுக்குள் மட்டும் ஆபாசம் எழுகிறதே?

சிங்கள கொலைவெறிக் காடையரான இனவெறியர் மனநிலையில்
பார்ப்பவருக்கு மட்டுமே
இன்றும் இச் சிறுமியில்
காமம் தெரியும்!

தமிழனாய் சிந்திப்பவனுக்கு
இவளினதும் இவள் போன்ற சிறுமிகளதும்
ஏக்கமும் இயலாமை வலியும்
மட்டுமே புரியும்!

இவள் அம்மணமாக்ப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறாள்
என்ற வரலாறும் தெரியும்!

வரலாற்றைச் சிதைக்க
வக்கணையாகப்
வடிவமெடுத்துப் பேசுவோரே!

ஊமைகளாக்கி எம்மை
எம் பெண்களைச்
சாகடித்தது போதும்!

செத்தாலும் பேச
உண்மை இருக்கிறது எம்மிடம்!
அது நெருப்பாகி எழுந்து பேசும்!

எங்களைப் பேச விடுங்கள்!
எங்கள் வலிகளைப்
பேச விடுங்கள்!

போர்த்தி மூடி உண்மைகளை
கயமையாக மூடி மறைக்காதீர்!

எம் கல்லறைகளை மட்டுமல்ல!
கற் சிலைகளும் இனிப் பேசும்!

இனியேனும் எங்களைப்
பேச விடுங்கள்!

இல்லையேல் பேச்சிழப்பது
பொய்யுருக்கொண்ட நீங்களாவீர்கள்!

இப்பொழுது பட்டியலிட்டுச் சொல்லுங்கள்!

இச்சிறுமியைப் பார்த்ததும்
காம உணர்வு வந்தவரெல்லாம்
வரிசையில் வந்து நில்லுங்கள்!

பகைவர் மனநிலையில் எம்
பெண்களின் அவலத்தைச் சொல்லும்
இச் சிறுமியின் சிலையைக்
காமக் கண் கொண்டு பார்த்தவரே!
உங்கள் விழிகளை
அடையாளங் கண்டு கொள்ளி வைக்க
கிரிசாந்திகள் காத்திருக்கின்றார்கள்!

எதிரியை விடக் கொடிய
பிணம் தின்னிப் பேய்களை
சுட்டெரிக்கும் நெருப்பேந்தி
அவர்கள் விழிகள் தீ ஏந்திக் காத்திருக்கின்றன!

வாருங்கள்!

அம்மணமான உங்கள் முகங்களோடு

வரிசையில் வாருங்கள்!

-சிவதர்சினி பிரபாகரன்-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply