ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய அமைப்பு!

You are currently viewing ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய அமைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் தமிழ்மக்களை இலக்குவைத்து மனிதாபிமானமற்ற மிகமோசமான குற்றங்களும் போர்க்குற்றங்களும் இழைக்கப்பட்டன என்பதற்குப் பெருமளவான சான்றுகள் உள்ளன. 

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு நீதித்துறை மற்றும் சட்டக்கட்டமைப்புக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதை அடையாளங்கண்டுகொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி வெளிநாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்வதன் மூலமும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேசக் கட்டமைப்புக்கள் வாயிலாக நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமும் தண்டையிலிருந்து விலக்களிக்கும் போக்கை முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் உள்ளிட்டோர் மனிதகுலத்திற்கு எதிரான துன்புறுத்தல்கள், நாடுகடத்தல்கள் ஆகிய குற்றங்களைப்புரிந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றங்களின் ஒருபகுதி ரோமசாசனத்தில் அங்கம்வகிக்கும் கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய உறுப்புநாடுகளின் நில எல்லைகளுக்குள் நடைபெற்றவையாகும்.

மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வழக்குகளை முன்மாதிரியாகக்கொண்டு, இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருக்கவேண்டும் என்று கடந்த வருடம் சர்வதேச தமிழ் அகதிகள் உதவி வலையமைப்புடன் இணைந்து எமது குழுமம் வலியுறுத்தியிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இலங்கையைப் பொறுப்புக்கூறவைப்பதற்கான முயற்சி ஐக்கிய நாடுகள் சபையினால் ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துவிட்டன. 

இருப்பினும் அப்போதிருந்து இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி மிகவும் கரிசனைக்குரிய வேகத்தில் சுருங்கிவருகின்றது. 

குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் தானாக முன்வந்து இணையனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து தற்போதைய அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகியதுடன் மாத்திரமன்றி, எந்தவொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளிலிருந்தும் ஆயுதப்படைகளைப் பாதுகாப்பேன் எனறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாகவே சூளுரைத்திருக்கின்றார். 

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஊடாக நிலைமாறுகால நீதியை இடைவிடாமல் கோருவதைத் தவிர வேறு தெரிவுகள் எமக்கு இல்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply