ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!

You are currently viewing ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!

ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின்

அவசிய அறிக்கை!

ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும்   தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம் கண்டித்து தடுக்க அழைக்கின்றோம்! 

சமரசம் செய்யாது  தாயக உரிமையையும் தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் அரசியலில் நிலைப்படுத்த முயன்று வரும் ஈழத்தமிழரின் இறைமையாளரான யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான திரு. கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான சிறிலங்காவின் கொலை முயற்சியையும், பின்னர் கொலையாளிகளை விசாரிக்காது பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரையே கைது செய்த சிறிலங்கா பொலிசாரின் செயற்பாட்டையும், ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் கண்டிக்கிறது. கொலை முயற்சியைத் தடுக்க உதவிய அருள்மதி, உதயகுமார் என்னும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு செயற்பாட்டாளர்களையும் கைதாக்கிய சிறிலங்கா, அதன்வழி ஈழத்தமிழர்களின் சனநாயகப் போராட்டங்களை படைபலம் கொண்டு நசுக்கும் சனநாயக மறுப்புச் செயல்களையும் பிரித்தானிய ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்கா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 30 செயற்பாட்டாளர்களைப் பலவழிகளில் இனங்காணக்கூடிய  அச்சத்துக்கு உள்ளாக்கியதையும் கண்டிக்கிறது.

சிறிலங்கா தாயக, தேசிய, தன்னாட்சி உணர்வுள்ள ஈழத்தமிழர் பாராளுமன்றப் பிரதிநிதிகளை இலக்கு வைக்கும் இந்தச் செயற்பாடானது அதன் இன்றைய அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்காவின், முப்படைக் கூட்டுத்தளபதிக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கி, பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து செயற்படுவதற்கெனப் பிரதி கூட்டுப்படைத்தளபதியையும் புதிதாக உருவாக்கி, ஆயுதப்படைகளின் திறன் எதிரிகளின் திறனுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளதென ஆராய்ந்து இவர்கள் செயற்படுவதற்கு இராணுவப் பிரதானியையும் நியமித்து,  பெருமளவு நிதியினையும் இராணுவத்துக்கு ஒதுக்கிகொடுக்க முற்படுவதும் ஈழத்தமிழ்மக்கள் மீதான யுத்தத்தின் முதற்படியெனலாம்.  இதனை ஈழத்தமிழர்களின் இனவழிப்புக் குறித்து எந்த அக்கறையும் காட்டாது சிறிலங்காவுக்கு நிதி வழங்கிப் பாதுகாக்கும் அனைத்துலக நாணயநிதியத்தின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறது.

“போர் என்றால் போர் – சமாதானம் என்றால் சமாதானம்”  என்று ரணிலின் உறவினரான முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஈழத்தமிழர்களின் தாயகத்தையும் தேசியத்தையும் தன்னாட்சியையும் ஒடுக்க இனவழிப்பு  இனத்துடைப்பு, பண்பாட்டு இனவழிப்பு என்பன மூலம் ஈழத்தமிழ் மக்கள் மேலான யுத்தத்தை 1978இல்  தொடங்கியது போலவே, ரணிலும் அதே பாணியில் மக்கள் மேலான யுத்தத்தை இன்று நடாத்திக் கொண்டு அதனைப் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனத் திரிபுபடுத்தி மக்களுக்கு உணர்ச்சிக்     கொந்தளிப்புக்கள் ஏற்பட,  மதவெறியை முன்னெடுத்து தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழரின் நிலங்களிலும் கோயில்களிலும் பௌத்த விகாரைகளைக் கட்டுவித்து வருகின்றார். இதனால் இன்னுமொரு ஈழத்தமிழினவழிப்பு விரைவில் சிறிலங்காவால் தமிழர் தாயகப்பகுதிகளிலேயே நடாத்தப்படக் கூடும் என்னும் அச்சம் பலமாக உள்ளது. இதனை இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உடன் ஆராயுமாறு ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் உலகநாடுகளையும் அமைப்புக்களையும் கோரி நிற்கிறது.

மேலும் ஈழத்தமிழர்களின் அரசியற்பணியை இனவழிப்பு அரசியல் செயற்திட்டங்களுடன், படைபல ஆக்கிரமிப்பின் மூலம் பெறும் அரசியல் சிறிலங்காவில் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமையாக 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இது என்றுமே ஈழத்தமிழர்களுக்கான சட்டத்தின் முன் அனைவரும் சமமான அரசியல் தீர்வு ஒன்றைச் சிறிலங்கா தராது என்பதை மீள் உறுதி செய்கிறது. இந்த வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையிலான உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பான அமைதியான ஆட்சி என்பது தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் ஆட்சி முறைமையிலேயே நடைமுறைச் சாத்தியமாகும் என்பதைப்  ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய  இராச்சியம் வலியுறுத்திக் கூறவிரும்புகிறது. இது பிரிவினைவாதமும் அல்ல; இதனை அடையும் ஈழத்தமிழ் மக்களின் முயற்சிகள் பயங்கரவாதமுமல்ல. ஈழத்தமிழினத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர் முயற்சியாகவே இது அமைகிறது.

1978 முதல் 2009 வரை ஈழத்தமிழர்கள் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையிலான 31 ஆண்டுகால நடைமுறை அரசில் வாழ்ந்து அதற்கான சட்ட அரசு ஏற்புடைமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரத்திலேயே 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் மூலம் சிறிலங்கா மீண்டும் ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளில் தனது படைபலத்தின் மூலம் சிறிலங்காவின் பாராளுமன்றக் கொடுங்கோன்மையினைத் தொடரத் தொடங்கியது. இந்த 14 ஆண்டுகளும் சிறிலங்காவால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான பரிகார நீதியோ, குற்றத்தை இழைத்தவர்களுக்கான தண்டனை நீதியோ சிறிலங்காவால் வழங்கப்படவில்லை. இனவழிப்பை யுத்தத்தின் விளைவு என்னும் வகையில் மூடிமறைக்கும் செயற்பாடுகளுடன் கூடிய உள்ளக பொறிமுறைகள் வழி பிரச்சினையை அணுகுதல் என்கிற போலித்தனமும் இனவழிப்பைச் செய்த படையினர் வழியாகவே அரச நிர்வாகத்தை நடாத்தி மக்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தால் அவர்களை அடக்கி ஆளும் தந்திரோபாயமும் நீதிமன்றங்களால் யுத்தக்குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களைக் கூட ஜனாதிபதி மன்னிப்பால் தண்டனையினை அனுபவியாது தடுக்கும் நீதியற்ற போக்கும் சிறிலங்காவின் தமிழர்கள் குறித்த ஆட்சி முறைமையாகத் தொடர்கிறது.

இந்த உண்மைகளின் அடிப்படையில்  எந்த பிரித்தானிய அரசின் காலனித்துவக் காலப் பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை தொடக்கம் பெற்றதோ அந்தப் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் அமைச்சின் முன்றலில் ஈழத்தமிழர்களின் உள்ளக,  வெளியகத் தன்னாட்சி உரிமைகளைப் பிரித்தானியா உட்பட்ட உலகநாடுகளும் அமைப்புக்களும் ஏற்பதன் வழியாகவே ஈழத்தமிழர்கள் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை முன்னெடுக்க முடியும் என்ற உண்மையை மீளவும் உறுதிப்படுத்த வேண்டும் என இதற்கான ஆதரவை உலகநாடுகளும் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு வழங்கி இன்று ஈழத்தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களையே இனப்படுகொலை செய்ய முயலும் சிறிலங்கா நாளை மீளவும் ஈழத்தமிழர்களை இனவழிப்பு செய்யாது அனைத்துலக சட்டத்தின் வழி  காக்க வேண்டும் என்றும் ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் அழைக்கின்றது.

இதனை சனநாயக வழிகளில் ஈழத்தமிழர் அடைய ஒரேவழி அவர்களின் தன்னாட்சி உரிமையை அனைத்துலக நாடுகளின் மன்றம் ஏற்று செயற்படுவதுதான், என்பதை  ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறது.

ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை! 1
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை! 2
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments