ஈழத் தமிழருக்கு எதிரான பமிலி மான்-2 தொடரை உடடியாக நீக்குமாறு நடிகர்கள் சங்கம் வலியுறுத்து!

You are currently viewing ஈழத் தமிழருக்கு எதிரான பமிலி மான்-2 தொடரை உடடியாக நீக்குமாறு நடிகர்கள் சங்கம் வலியுறுத்து!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான பமிலி மான்-2 வலைத்தள தொடரை அமேசான் ப்ரைம் நிறுவனம் உடனடியாக நீக்கவேண்டும் என தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கெதிரான மிகப்பெரிய நுண்ணரசியல் திட்டமிடுதலோடு பமிலி மான்-2 வலைத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் 9-அத்தியாயங்களாக வெளிவந்திருக்கிறது. தமிழீழ தேசிய இன விடுதலை இலட்சியத்தோடு பயணித்த விடுதலைப் புலிகளின் நோக்கத்தை, அவர்களின் நேர்மையை, அவர்களின் ஈகத்தை, அவர்களின் போர் அறத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு இந்த வலைத்தொடரின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மது, புகை தடை செய்யப்பட்ட ஒரு தூய விடுதலை இயக்கத்தை, தமிமீழத் தேசியத் தலைவர் உள்ளிட்ட அமைப்பில் உள்ள முகாமையான தலைவர்கள் அனைவரும் மது அருந்துவது போலவும், கெட்டவார்த்தைகளைச் சரளமாகப் பேசுகிறவர்கள் போலவும் சித்தரித்திருப்பது இருப்பது வேதனையளிக்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.

ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதின் மூலம் உலகில் எல்லா தளங்களிலும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதுதான் இந்த வலைத்தள தொடரின் நோக்கம்.

அதுமட்டுமல்ல தமிழ் மீண்டும் இனம் புத்தெழுச்சிப்பெற்றுவிடக் கூடாது என்ற தொலை நோக்கோடு திரைப்படங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தமிழர்களுக்கெதிரான விசமத் தனங்களை பரப்பி உலகெங்கும் உளவியல் ரீதியாக ஒடுக்கிவிடுவது இதன் ஒருபகுதியாகத்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிரான திரைப்படங்களை பமிலி மான்-2 போன்ற தொடர்களை உருவாக்க முனை கிறார்கள். இது மேலும் தொடராது தடுக்க வேண்டும் எனவும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் எதிரிகள் என்கிற கருத்து உருவாக்கத்தை இலங்கையும் இந்திய உளவுத் துறையும் இணைந்து நுட்பமாக உலகெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பமிலி மான் -2 வலைத்தள தொடர் கடும் தமிழர்களின் எதிர்ப்பை மீறி வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, அமேசன் பிரேம் நிறுவனம் அதன் தளத்திலிருந்து நிரந்தரமாக இந்த பமிலி மான் -2 வலைத்தள தொடரை நீக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை உலகத் தமிழினம் ஒன்றிணைந்து கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான கலைப்படைப்புகளை யார் செய்தாலும் அதற்கு நான் சார்ந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்யும் என்பதையும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என்பதையும் இந்த அறிக்கையின் ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply