ஈழமுரசின் தலையங்கம்!! யாருக்கு வாக்களிப்பது ?

You are currently viewing ஈழமுரசின் தலையங்கம்!! யாருக்கு வாக்களிப்பது ?

தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் நீதிக்கான சீக்கிய அமைப்பு (ளுiமாள கழச துரளவiஉந) திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் என்ற தனி நாடு கோருவது குறித்து பஞ்சாப்பிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்தும் வாழும் சீக்கியர்களிடம் எதிர்வரும் நவம்பர் மாதம் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தத் திட்டமிட்டு, அதற்காக வேலைத்திட்டங்களை அந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

1984 பொற்கோயில் நடவடிக்கைக்கு பின்னர் இடம்பெற்ற சீக்கிய இனப்படுகொலையின் போதும், தொடர்ந்து வந்த காலப்பகுதிகளிலும் பஞ்சாப்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் சீக்கியப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள், காணாமல்போதல்கள், போலிப் படுகொலைகள் (என்கவுண்டர்கள்) என அம்மக்கள் மீது இந்திய அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடிவரும் புலம்பெயர்ந்த சீக்கிய அமைப்புக்கள் இந்தத் தனிநாட்டுக் கோரிக்கை வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளன.

s

இந்த அமைப்பு முன்வைத்துள்ள தனிநாட்டுக் கோரிக்கைக்கு பெரும்பான்மையான சீக்கியர்கள் செவிசாய்த்து வாக்களிப்பார்கள் என்பதால் அதனை ஆரம்பித்திலேயே தடுத்துவிட இந்திய அரசு நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. இந்த நீதிக்கான சீக்கிய அமைப்பு கடந்த வாரம் முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவு வழங்கிவரும் புலம்பெயர்ந்த சீக்கிய அமைப்புக்கள் பலவும் இந்தியாவின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சீக்கியர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிடம், இந்திய இறையாண்மைக்கு எதிரான வாக்கெடுப்பு இதுவெனக் கூறியுள்ள இந்திய அரசு, இவ்வாறான வாக்கெடுப்பிற்கு அங்கீகரிக்காரம் வழங்கவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து சீக்கியர்கள் அதிகம் வாழும் கனடா போன்ற சில நாடுகள், சீக்கியர்களின் இந்தத் தனிநாட்டிற்கான பொதுவாக்கெடுப்பை அங்கீகரிக்க போவதில்லை என கூறியுள்ளன.

எனினும், புதிய மென்பொருள் தொழில்நுட்பங்கள் ஊடாக இந்த வாக்கெடுப்பை நடத்த சீக்கிய அமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருந்தபோதும் தற்போது மென்பொருளை தரவிறக்கம் செய்வதைத் தடுத்து நிறுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பொது வாக்கெடுப்பை நடத்தி சீக்கியர்களின் தனிநாட்டுக் கோரிக்கை அவாவை இந்த உலகிற்கு நிரூபிப்பதில் நீதிக்கான சீக்கிய அமைப்பும் புலம்பெயர்ந்த சீக்கிய அமைப்புக்களும் உறுதியாக இருக்கின்றன.

இந்தியா என்ற ஒரு பெரும் அரசை எதிர்த்து தனிநாட்டிற்கான வாக்களிப்புக் குறித்து புலம்பெயர்ந்த சீக்கிய சமூகம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில்தான், இனப்படுகொலையில் சிக்கி அதன் வடுக்கள் கூட ஆறாத ஈழத் தமிழினம் இன்னொரு வாக்களிப்புக் குறித்து மிகத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றது.

s

நடக்கவிருக்கும் சிறீலங்காவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிப்பதா, அவர்களினால் தமிழினப் படுகொலைக்கென பயன்படுத்தப்பட்ட ஒட்டுக்கு குழுக்களுக்கு வாக்களிப்பதா,  சிங்களக் கட்சிகளுக்கு முண்டுகொடுத்து நிற்கக்கூடிய தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிப்பதா? தமிழர்களுக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு சிங்களத் தலைமைகளுக்கு ஆலவட்டம் தூக்குபவர்களுக்கு வாக்களிப்பதா, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு ஆசனங்களுக்காக தேசியத்தை விற்கக்கூடிய கட்சிகளுக்கு வாக்களிப்பதா, அல்லது தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளுக்கு உறுதியோடு குரலெழுப்பிவரும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பதா என்று இன்னமும் தீர்மானிக்கமுடியாமல் தமிழ் மக்கள் குழம்பிப்பிப்போயிருக்கின்றார்கள்.

ஒட்டுமொத்த சீக்கிய சமூகமும் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்து அது சீக்கியர்களின் காலிஸ்தான் என்ற தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச்சேர்த்தவிடுமோ என்று அஞ்சித்தான், இந்தியா இந்த வாக்கெடுப்பு நடந்துவிடாமல் தடுப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து வழிகளையும் பயன்படுத்திவருகின்றது. ஆனால், இவ்வாறான ஒரு அச்சம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்காவின் இரு பிரதான கட்சிகள் உட்பட எந்தவொரு சிங்களக் கட்சிக்கும் கிடையாது. காரணம், தமிழர்களுக்கு இடையில் இவ்வாறான ஒரு ஒற்றுமை ஏற்பட்டுவிடாது என்பது சிங்களக் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். தன்னுடைய இனத்தை அழித்தவனுக்கு வாக்களியுங்கள் என்று ஒரு தமிழன், ஒரு சிங்களக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி துணிவுடன் தமிழர்களுக்கு முன்னால் செல்லமுடியும் என்றால், சிங்களவர் எப்படி தமிழர்களின் வாக்குப்பலம் குறித்து அச்சப்படுவார்கள்?

இனத்தை அழித்தவர்கள், முள்ளிவாய்க்கால்வரை விரட்டிச்சென்று பெரும் பேரழிவை நிகழ்த்தியவர்கள் மட்டுமல்ல, தமிழினத்தின் தாயகத்திற்கும், தேசியத்திற்கும், தன்னாட்சி உரிமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் அனைத்துச் சக்திகளையும் புறந்தள்ளி, தங்களுக்கான சரியான தேர்வு யார், எதற்கும் விலைபோகாது இனத்திற்காக உறுதியோடு குரலெழுப்புவர்கள் யார் என்பதை புரிந்துகொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லாது போனால், தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவிரைவில் இருண்டகாலத்திற்குள் செல்வதை யாராலும் தடுக்கமுடியாது.

தற்காலிகமான சுய இலாபங்கள் குறித்து மட்டும் சிந்திக்காமல், எதிர்காலத் தலைமுறைகளின் இருப்புக் குறித்தும் மிக நீண்ட தூரப் பார்வையுடன் சிந்தித்து, தமிழ் மக்கள் வாக்களித்தாலேயே தமிழ் மக்களின் இருப்பு தாயகத்தில் தக்கவைக்கப்படும். இல்லையேல், தமிழ் மக்கள் இல்லாத தாயகத்திற்காக எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும் தேவைகூட இல்லாது, தமிழீழம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு கனவாகவும் கானல் நீராகவும் போய்விடும்.

பகிர்ந்துகொள்ள