நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை தங்களுக்கு வழங்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
ஆனால் உக்ரைனின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தொடர்ந்து மவுனம் காண்பித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஜேர்மனியின் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக வெளியான செய்திக்கு ஜேர்மனி மறுப்பு தெரிவித்து இருந்தது.
மேலும் எங்களுடைய ஏவுகணைகள் சிறப்பு வரம்புகளை கொண்டுள்ளது, அத்துடன் உக்ரைனுக்கு Taurus ஏவுகணைகளை வழங்குவது என்பது எங்களுக்கு முக்கியத்துவமானது என்று நாங்கள் நம்பவில்லை என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரான்ஸின் SCALP ஏவுகணை உக்ரைனுக்கு வந்தடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து விமானப்படை தளத்திற்கு வந்து இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைனிய விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் மற்றும் மார்டன் ஆயுதங்களை உற்று நோக்கினார்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் SCALP ஏவுகணை ஏவுகணை மீது “உக்ரைனுக்கு வெற்றி” (Glory to Ukraine) என்று கையெழுத்திட்டார்.
ஆனால் பிரான்ஸில் இருந்து உக்ரைனுக்கு வந்துள்ள இந்த SCALP ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரத்தை மட்டும் சுற்றி வளைக்கும் திறனுடன் மாற்றியமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.