உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு கடந்த பின்னர் முதல் முறையாக கனேடிய ராணுவ தளபதி ஒருவர் அந்த நாட்டுக்கு பயணப்பட்டுள்ளார். இது தொடர்பில் சனிக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப கனேடிய ராணுவம் ஆதரவு அளிக்கும் என ஜெனரல் வெய்ன் ஐர் உறுதி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் ஜெனரல் வெய்ன் ஐர் உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் 2021 டிசம்பர் மாதம் அவர் உக்ரைன் சென்றிருந்தார்.
உக்ரைனில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால், கனடா ராணுவம் மற்றும் நேட்டோ நாடுகளும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும், ஆபத்தான ஒரு கட்டத்தில் உக்ரைன் போரிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவ அதிகாரிகளுடன் தற்போதைய நிலை குறித்து கலந்தாலோசித்துள்ளதாக கூறும் ஜெனரல் வெய்ன் ஐர், உக்ரைன் ராணுவத்தினரையும் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
கனேடிய நிர்வாகம் உக்ரைனுக்கான 5 பில்லியன் டொலர்கள் வரையில் பல கட்டமாக உதவி செய்ய உறுதி அளித்துள்ளது. அத்துடன் 1.2 பில்லியன் டொலர் ராணுவ உதவி, 320 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி, 96 மில்லியன் டொலர் அளவுக்கு வளர்ச்சிப்பணிகளுக்கான உதவி, 68 மில்லியன் டொலர் அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிகளையும் கனடா மேற்கொள்ள இருக்கிறது.