உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களையும், கவசவாகனங்களையும் அள்ளிக்கொடுக்கும் அமெரிக்காவும், நேட்டோவும், மேற்குலகமும், உக்ரைனுக்கு பக்க பலமாக நிற்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவதை தடுக்கின்றன என ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், கவசவாகனகளை வழங்குவதன் மூலம், இவ்விடயத்தில் மேற்குலகம் நேரடியாக தலையீடு செய்வதாகவும், இது போரை நீடிக்கவே வைக்குமெனவும் கண்டித்துள்ள ரஷ்யா, மேற்குலகத்தின் நேரடி தலையீடு நிலைமையை மிகமிக மோசமான நிலைக்கு இட்டுச்செல்லுமெனவும், உலகளாவிய ரீதியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சிக்கிறதெனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்க போர்விமானங்களான “F – 16” போர்விமானங்களை வழங்குவதற்கான பேச்சுக்களை மேற்குலகம், குறிப்பாக நெதர்லாந்து முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, தன்னிடமுள்ள சோவியத் தயாரிப்பான “Mig – 29” போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதாகவும், எனினும் அதற்கு பதிலாக தனக்கு அமெரிக்க “F – 16” இரக போர்விமானங்கள் கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யவேண்டுமென போலந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமெரிக்கா அதனை நிராகரித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவால் பாவனையிலிருந்து அகற்றப்பட்டுள்ள “F – 16” போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும் யோசனையை நெதர்லாந்து முன்மொழிந்துள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது. “F – 16” போர்விமானங்களுக்கு மாற்றீடாக, “F – 35” போர்விமானங்களை பாவனைக்கு எடுத்துள்ள அமெரிக்காவும், நேட்டோவும், மேற்குலக நாடுகளும் தம்மிடமுள்ள காலாவதியானதவை என கழிக்கப்பட்ட “F – 16” போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்கி அவற்றை தம்மிடமிருந்து இலகுவாக அகற்ற முயல்கின்றனவா என கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, மேற்குலகம் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ தளபாடங்கள் காலாவதியானவை, உதிரிப்பாகங்கள் கிடைக்கதவை, பழுது பார்க்கப்பட முடியாதவை என அடையாளப்படுத்தப்பட்டவை என சர்ச்சைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்போது 1970 ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்ட, ஜெர்மனியின் “Leopard – 2” வகையான கவசவாகனங்களை உக்ரைன் மலையாக நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவால் பாவனையிலிருந்து அகற்றப்பட்டுள்ள “F – 16” போர்விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை உற்றுநோக்கத்தக்கது.