உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்குவதற்காக செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவின் மூன்று இளம் வயது மகன்கள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு ஆதரவாக 14,15 மற்றும் 16 வயதுடைய தனது மூன்று இளம் வயது மகன்கள் விரைவில் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் கலந்து கொண்டு முன்னணியில் போராடுவார்கள் என்று செச்சென் நாட்டின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய கூட்டாளியான செச்சென் தலைவர் கதிரோவ், அவரது மூன்று மகன்களும் போர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சிகளை டெலிகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் சிறு வயது என்பது தாய் நாட்டின் பாதுகாப்பிற்கான பயிற்சியில் தலையிட கூடாது என கதிரோவ் தெரிவித்துள்ளார்.
அக்மத்(16), எலி(15) மற்றும் ஆடம்(14) ஆகியோரின் போர் பயிற்சி நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது, ஆனால் சிறு வயதிலிருந்தே சுடத் தெரிந்தால் மட்டும் போதாது, பல்வேறு ஆயுதங்களை எவ்வாறு கையாளுவது, எந்த தூரத்திலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தத்துவார்த்த அடித்தளங்கள் ஆகியவை அவர்களுக்கு தற்போது கற்பிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும் “எந்தவொரு தந்தையின் முக்கிய குறிக்கோள், தனது மகன்களுக்கு பக்தியை ஊட்டுவதும், குடும்பம், மக்கள், தாய்நாட்டைப் பாதுகாக்க கற்றுக்கொடுப்பதும் என்று நான் எப்போதும் நம்பினேன். உங்களுக்கு அமைதி வேண்டுமென்றால் போருக்குத் தயாராகுங்கள்!” எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் லைமன் நகரம் இழந்த பிறகு பேசிய கதிரோவ், உக்ரைனில் குறைந்த மகசூல் கொண்ட அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என மாஸ்கோவிற்கு பரிந்துரைத்துள்ளார்.
அணு ஆயுதங்கள் பற்றிய கதிரோவின் கருத்துக்களுக்கு பதிலளித்த பெஸ்கோவ், அவற்றைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் ரஷ்யாவின் பாதுகாப்புக் கோட்பாட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.