உக்ரைனில் சீவிரோடோனெட்ஸ்க் பகுதியில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு இருந்த ஆற்றுப் பாலத்தை ரஷ்ய படையினர் ஏவுகணைகளால் தகர்த்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது உக்ரைனின் தெற்குப் பகுதி நகரமான சீவிரோடோனெட்ஸ்க்கில் ( Sievierodonetsk) தெருக்கு தெரு, மீட்டருக்கு மீட்டர் என்ற அளவில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நகரின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை ரஷ்ய படைகள் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருக்கும் நிலையில், நகரின் தொழிற்பகுதியை மட்டும் உக்ரைனிய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
இவற்றில் நூற்றுக்கணக்கான சீவிரோடோனெட்ஸ்க் பொதுமக்கள் தொழி்ற்சாலை பகுதியில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் தப்பிக்க இருந்த ஆற்றுப் பாலத்தை ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துவிட்டதாக லுஹான்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் அழித்துள்ள இந்த பாலம் சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தை சிவர்ஸ்கி டோனெட்ஸ் நதிக்கு அப்பால் இருக்கும் லிசிசான்ஸ்க் ( Lysychansk) நகருடன் இணைத்து இருந்தது என செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீவிரோடோனெட்ஸ்க் நகரை உக்ரைனின் பிற நகரங்களுடன் இணைக்கும் மூன்று பாலங்களில் இரண்டினை ரஷ்ய படைகள் தகர்த்து இருப்பதாகவும், மீதமுள்ள ஒற்றை பாலம் மட்டுமே சீவிரோடோனெட்ஸ்க் நகரை உக்ரைனின் பிற நகரங்களுடன் இணைக்கும் ஒரே தரைவழி என செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லாததையும், ஒப்புக்கொள்ளப்பட்ட வெளியேற்றும் பாதைகள் இல்லாததையும் குறிப்பிட்டு, ஒருவேளை மீதமுள்ள அந்த ஒற்றை பாலமும் ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்டால் உக்ரைனிய நகரங்களுடனான தரைவழி தொடர்பை சீவிரோடோனெட்ஸ்க் முற்றிலுமாக இழந்துவிடும் எனத் தெரிவித்தார்.
சீவிரோடோனெட்ஸ்க் நகரின் மூன்றில் இரண்டு பங்கை ரஷ்ய படையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாகவும், மூன்றில் ஒற்றை பங்கிற்கு கொஞ்சம் அதிகமான பகுதிகளை உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.