உக்ரைனிய கிராமங்கள் மீது ரஷ்ய ராணுவம் நெருப்பு மழை பொழிந்து இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து வெளியேறி தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸின் கிராமப்பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளை முழுவதுமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் இந்த பகுதிகளில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில், கிழக்கு உக்ரைனின் கிராமப் பகுதி ஒன்றில் ரஷ்ய ராணுவம் பயங்கரமான ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தநிலையில், இதுத் தொடர்பான வீடியோ காட்சியை ТРУХА செய்தி நிறுவனம் வெளியிட்டு, உக்ரைனிய கிராமங்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில், ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலினால் ஏற்பட்ட நெருப்பு மழைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, ரஷ்ய ராணுவத்தின் இந்த பயங்கர தாக்குதலினால் உக்ரைனின் கிழக்கு பகுதிக் கிராமங்களில் பதற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளது.