உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய TOS-1A ரக ஷெல் தாக்குதல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 92வது நாளாக நடைப்பெறும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் ஏவுகணை தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதலால் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியான லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களையும் ரஷ்ய ராணுவம் முழுமையான தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையானது உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் இருந்து விலகி, தற்போது அதன் கிழக்கு பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ளது.
அந்தவகையில், உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் நோவோமிகைலிவ்கா(Novomykhailivka)பகுதியில் இருந்த உக்ரைனிய துருப்புகள் மீது ரஷ்ய ராணுவத்தினர் மிகவும் பயங்கரமான TOS-1A ரக வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இதுத் தொடர்பான வீடியோ காட்சியை இணையத்தில் பகிர்ந்துள்ள உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா ராணுவம் உக்ரைனிய துருப்புகள் மீது மிகவும் பயங்கரமான TOS-1A ரக வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவே 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மற்றும் மிகக் கொடூரமான போர் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் நோவோமிகைலிவ்கா பகுதியில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்திய TOS-1A ரக வெடிகுண்டுகள் தெர்மோபரிக் ஆயுதங்கள் என்றும் சில சமயங்களில் வெற்றிட குண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை குண்டு விழுந்த இடத்தை சுற்றியுள்ள காற்றில் இருந்த ஆக்ஸிஜனை உள் இழுத்து மிக உயர்ந்த ஆற்றல் வெடிப்பு நிகழ்வை ஏற்படுத்தகூடிய வல்லமைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.