உக்ரைன் – ரஷ்ய போரால் பில்லியன்களை குவிக்கும் நோர்வே!

You are currently viewing உக்ரைன் – ரஷ்ய போரால் பில்லியன்களை குவிக்கும் நோர்வே!

உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் எதிரொலியாக, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், மேற்குலகமும் விதித்துள்ள தடைகளையடுத்து, ரஷ்யா எடுத்த எதிர் நடவடிக்கைளில், ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை கொள்வனவு செய்த ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளமை முக்கியமானது. இதன் காரணமாக, ஐரோப்பாவின் எரிவாயு தேவைகளுக்கான கோரல் அதிகரித்துள்ள நிலையில், நோர்வேயிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எரிவாயுவின் மூலம் வருமானத்தை அள்ளிக்குவிக்கிறது நோர்வே.

ரஷ்யா விதித்துள்ள ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதி தடையால், எரிவாயு பற்றாக்குறை காரணமாக ஐரோப்பிய நாடுகள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நோர்வே, பல்வேறு காரணங்களுக்காகவும் இயங்காமல் மூடப்பட்டிருந்த எரிவாயு உற்பத்தி நிலையங்களை மீளவும் திறந்து உற்பத்திகளை முடுக்கி விட்டுள்ளது. இதில், “உலகின் வடதுருவ நகரம்” என்று குறிப்பிடப்படும், நோர்வேயின் “Hammerfest” நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலையம், அதில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் 2020 ஆம் ஆண்டிலிருந்து இயங்காமல் கிட்டத்தட்ட கைவிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அவசர அவசரமாக இயங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி உற்பத்தி நிலையத்திலிருந்து பெறப்பட்ட திரவ எரிவாயுவை ஏற்றிய முதலாவது கப்பல், ஐரோப்பிய நாடுகளுக்கான தனது பயணத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, குளிர்விக்கப்பட்ட நிலையில் திரவமாக (LNG) மாற்றப்பட்டு, கப்பல்களில் ஏற்றப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இதுவரை காலமும் எரிவாயு பெற்றுக்கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், எரிவாயுவுக்கான கட்டணத்தை ரஷ்ய நாணயமான “ரூபிள்” இலேயே செலுத்த வேண்டுமென ரஷ்யா தீர்மானமாக சொல்லியிருந்தாலும் அதற்கு ஒத்துக்கொள்ளாத நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய ரீதியில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடான நோர்வே நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கணக்கெடுப்புக்களின்படி, இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் நோர்வேயிலிருந்து ஏற்றுமதியான திரவ எரிவாயுவின் வருமானம் 169 பில்லியன் நோர்வே குறோணர்கள் எனவும், கடந்த வருடங்களில் இதே காலப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளோடு ஒப்பிடும்போது இத்தொகை அபரிமிதமானது எனவும் தெரிவிக்கப்படும் நிலையில், இப்போது ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதியான எரிவாயு நிறுத்தப்பட்டிருப்பதால், தனது ஏற்றுமதியை அதிகரித்திருக்கும் நோர்வே, இன்றைய கணக்குப்படி, திரவ எரிவாயு ஏற்றுமதி மூலம் ஒரு நிமிடத்துக்கு 2.2 மில்லியன் நோர்வே குறோணர்களை அள்ளிக்குவிக்கிறது எனவும், இவ்வருடம் 1200 பில்லியன் நோர்வே குறோணர்களை நோர்வே இவ்வகையிலான வருமானமாக பெறும் எனவும் நோர்வேயின் எண்ணெய் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகம் முழுவதிலும் பசுமைப்புரட்சி நடைபெற வேண்டுமெனவும், அதற்காக, பெற்றோலியப்பொருட்கள் / நிலக்கரி உட்பட, சூழலை மாசடைவிக்கும் அனைத்துவிதமான மூலப்பொருட்களின் பாவனைகளும் இல்லாதொழிக்கப்பட்டு, சூரிய சக்தி / மின்சக்தி மாத்திரமே எதிர்காலத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமெனவும் கொள்கையை பிரதானமாக கொண்டிருக்கும் நோர்வே, சூழலை மாசடைவிக்கும் பெற்றோலிய / எரிவாயு ஏற்றுமதியை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது அல்லவென கருத்துரைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், 2030 ஆம் ஆண்டுக்கிடையில் இவ்வாறான சூழலை மாசடைவிக்கும் மூலப்பொருட்களின் பாவனையை 43 சதவிகிதத்தால் குறைக்க வேண்டுமென முன்னதாக ஒத்துக்கொள்ளப்பட்ட உலகளாவிய வேலைத்திட்டத்தை, நோர்வேயின் அபரிமிதமான ஏற்றுமதி மிகவும் பாதிக்குமெனவும் விசனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply