ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தரப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழலில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளை அமெரிக்க நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும், குறிப்பிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாமா என்பது தொடர்பில் அதிகாரிகள் குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் ரஷ்யாவிடம் இருந்து முக்கிய ஆயுதங்களை இந்தியா வாங்கியது. இது அமெரிக்காவை நெருக்கடிக்கு தள்ளியதுடன், பொருளாதாரத் தடை விதிக்கும் அளவுக்கு விதி மீறல் நடவடிக்கை என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்காவை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறிப்பிட்ட S-400 ஆயுதத்தை வாங்கிய நேட்டோ உறுப்பு நாடான துருக்கியை 2020 டிசம்பரில் அமெரிக்கா தடைகள் விதித்து தண்டித்தது.
ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க கடந்த பல மாதங்களாக இந்தியாவை அமெரிக்கா நெருக்கி வருகிறது. மேலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கவிருந்த MiG-29 ரக போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், டாங்கிகளுக்கு எதிராக பயன்படுத்தும் ஆயுதங்கள் என அனைத்தையும் இந்தியா ரத்து செய்தது.
இருப்பினும், ரஷ்யா மீதான இந்தியாவின் மிருதுவான போக்கு அமெரிக்காவை கோபமடைய செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.